இஷாந்த் சர்மா 100 டெஸ்டுகள்: நம் காலத்து சாதனையாளர்!

2018-க்குப் பிறகு உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என இஷாந்த் சர்மாவைக் கூறலாம்.
இஷாந்த் சர்மா 100 டெஸ்டுகள்: நம் காலத்து சாதனையாளர்!

2008 பெர்த் டெஸ்டை இஷாந்த் சர்மாவால் மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க முடியாது.

19 வயது வீரராக உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ரிக்கி பாண்டிங் சிறிது நேரம் திணறடித்து கடைசியில் அவருடைய விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தியபோது இந்த வீரர் நிச்சயம் 100 டெஸ்டுகளில் விளையாடுவார் எனப் பலரும் கனவு கண்டிருப்பார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது 100-வது டெஸ்டை விளையாடி வருகிறார் இஷாந்த் சர்மா. 

இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடியுள்ள 32 வயது இஷாந்த் சர்மா, 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 80 ஒருநாள், 14 டி20 ஆட்டங்களிலும் அவர் விளையாடியுள்ளார். 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் அவரால் 32 வயதுக்குள் 100 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 

கபில் தேவுக்கு அடுத்ததாக 100-வது டெஸ்டை விளையாடும் 2-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். உலகளவில் 12-வது வேகப்பந்து வீச்சாளர்.

100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள்

1. காலிஸ் - 166 டெஸ்டுகள் - 292 விக்கெட்டுகள்
2. ஆண்டர்சன் - 158 டெஸ்டுகள் - 611 விக்கெட்டுகள்
3. பிராட் - 145 டெஸ்டுகள் - 517 விக்கெட்டுகள்
4. வால்ஷ் - 132 டெஸ்டுகள் - 519 விக்கெட்டுகள்
5. கபில் தேவ் - 131 டெஸ்டுகள் - 434 விக்கெட்டுகள்
6. மெக்ராத் - 124 டெஸ்டுகள் - 563 விக்கெட்டுகள்
7. வாஸ் - 111 டெஸ்டுகள் - 355 விக்கெட்டுகள்
8. பொல்லாக் - 108 விக்கெட்டுகள் - 421 விக்கெட்டுகள்
9. வாசிம் அக்ரம் - 104 டெஸ்டுகள் - 414 விக்கெட்டுகள்
10. போத்தம் - 102 டெஸ்டுகள் - 383 விக்கெட்டுகள்
11. எண்டினி - 101 டெஸ்டுகள் - 390 விக்கெட்டுகள்
12. இஷாந்த் சர்மா - 100* டெஸ்டுகள் - 302 விக்கெட்டுகள்

இஷாந்த் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையே ஒரு கிரிக்கெட் ஆட்டம் போல பல்வேறு திருப்புமுனைகளைக் கொண்டது. ஆரம்பத்தில் ஓரளவு நன்கு வீசி வந்த இஷாந்த் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்வின் 2-வது பகுதியில் சுமாராகப் பந்துவீசி பலருடைய அதிருப்திக்கும் ஆளானார். இந்தியாவில் நடைபெற்ற டெஸ்டுகளில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை தோனி பயன்படுத்தியதால் உண்டான விளைவு இது. பிறகு கவுண்டி கிரிக்கெட் பக்கம் சென்று பல்வேறு உத்திகளைக் கற்றுக்கொண்ட பிறகு ஆளே மாறிப் போனார் இஷாந்த் சர்மா. கோலியின் தலைமையின் கீழ் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக முன்னேறியுள்ளார்.

2018-க்குப் பிறகு உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என இஷாந்த் சர்மாவைக் கூறலாம். அதிக விக்கெட்டுகள், குறைந்த சராசரி என அசத்தலான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இந்திய அணியில் பும்ரா, ஷமியுடன் போட்டியிட வேண்டிய நிலைமை உள்ளதால் தன் திறமையை மேலும் அதிகரித்து சாதித்து வருகிறார். 

இஷாந்த் சர்மா

முதல் 33 டெஸ்டுகள் - 32.60 சராசரி
34-66 டெஸ்டுகள் - 41.34 சராசரி
67-99 டெஸ்டுகள் - 23.42 சராசரி

2016-க்குப் பிறகு - 101 விக்கெட்டுகள் 22.91 சராசரி
2018-க்குப் பிறகு - 76 விக்கெட்டுகள் - 19.34 சராசரி 

2018-க்குப் பிறகு 50 விக்கெட்டுகளுக்கு அதிகமாகவும் குறைந்த சராசரியும் கொண்ட வீரர்களில் இஷாந்த் சர்மாவுக்கு 2-ம் இடம். ஹோல்டர் மட்டுமே 63 விக்கெட்டுகளுடன் 19.04 சராசரியுடன் முதல் இடத்தில் உள்ளார். 2018-க்குப் பிறகு கம்மின்ஸ், ஆண்டர்சன், பும்ரா, பிளாண்டர், செளதி, பிராட், வாக்னர் ஆகியோரை விடவும் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார் இஷாந்த் சர்மா. இது மகத்தான முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. 

மேலும் 2013-க்குப் பிறகு ஒருநாள், டி20 அணியில் இஷாந்த் சர்மாவுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டி20யில் கடைசியாக 2013-லும் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக 2016-லும் விளையாடினார்.இதுதொடர்பாக இஷாந்த் சர்மாவுக்குப் புகார்கள் இருந்தாலும் இதுவே அவருடைய முழுக் கவனத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திருப்பியது. தனது பந்துவீச்சுத் திறமையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டார். 

இதற்குப் பிறகு வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராலும் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம் என்கிறார் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பரும் தில்லி முன்னாள் வீரருமான விஜய் தாஹியா. பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

100 டெஸ்டுகளில் விளையாடும் கடைசி இந்திய வேகப்பந்து வீச்சாளராக இஷாந்த் சர்மா இருப்பார் என நினைக்கிறேன். வேறு யாரும் விளையாட வாய்ப்பில்லை. பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐபிஎல் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட தங்கள் சக்தியைச் செலவிடுவதால் இந்திய அணிக்காக அவர்கள் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம். தன்னுடைய கேப்டனுக்கு என்ன தேவையோ அதை வழங்கியதால் தான் இஷாந்த் சர்மாவால் இவ்வளவு காலம் விளையாட முடிந்தது. ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்துவீச்சாளராக இஷாந்த் சர்மாவை தோனி பயன்படுத்தினார். சுழற்பந்து வீச்சாளர்களைப் போல ஒருநாளைக்கு 20 ஓவர்களை வீசுவார். முதல்தர கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி அவர் சோர்வடையவில்லை. உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். மூன்று வருடங்கள் ரஞ்சி போட்டியில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்கள் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள். வேகத்தில் சமரசம் செய்துகொள்வார்கள். இஷாந்த் சர்மாவுக்கு அந்த நிலை ஏற்படவில்லை என்றார். 

இஷாந்த் சர்மாவின் அடுத்த இலக்கு 150 டெஸ்டுகளாக இருக்க வேண்டும். உடற்தகுதியைத் தக்கவைத்து, இதேபோல சிறப்பாகப் பந்துவீசினால் தொட முடியாத உயரமல்ல அது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com