ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது...
அபினவ் பிந்த்ரா
அபினவ் பிந்த்ரா

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப் பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில், நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலேய  வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின் சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன் கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால், ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920 பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள் கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. 

1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது. அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது. அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பிக்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது. கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு 28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார் அபினவ் பிந்திரா.

1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952 ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை ஏற்பட்டது. 

1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ்,  கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய  அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3 பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார். குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார் விஜேந்தர் சிங். 

2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது. ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பெரிய பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர் தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை. 

ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது. மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். 

டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில், யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித் பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com