ரோஹித் சர்மா 264: கனவில்கூட நினைத்திராத சாதனை நிகழ்த்தப்பட்ட நாள்!

இந்திய வீரர் ரோஹித் சர்மா 7 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் விளாசி எவராலும் எளிதில் முறியடிக்க முடியாத உலக சாதனையைப் படைத்தார். 
ரோஹித் சர்மா 264: கனவில்கூட நினைத்திராத சாதனை நிகழ்த்தப்பட்ட நாள்!


இந்திய வீரர் ரோஹித் சர்மா 7 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 264 ரன்கள் விளாசி எவராலும் எளிதில் முறியடிக்க முடியாத உலக சாதனையைப் படைத்தார். 

2014-இல் இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி 4-வது ஆட்டத்தில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக அஜின்க்யா ரஹானே, ரோஹித் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ரஹானே 3 பவுண்டரிகள் அடித்து அசத்தல் தொடக்கம் தந்தார். பின்னர், ரன் ரேட்டில் சரிவு ஏற்பட்டது.

ரோஹித் சர்மா 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, திசாரா பெரேரா கேட்ச் வாய்ப்பினைத் தவறவிட்டார். இதன்பிறகு, சீரான இடைவெளியில் ரஹானே, அம்பதி ராயுடு ஆட்டமிழக்க, விராட் கோலியுடன் இணைந்து பாட்னர்ஷிப்பை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டது. 

72 பந்துகளில் முதல் அரைசதம்:

நிதானம் காட்டிய ரோஹித் சர்மா 72-வது பந்தில் 1 ரன் எடுத்து அரைசதத்தை எட்டினார். 

அடுத்த 28 பந்துகளில் 2-வது அரைசதம்:

இதன்பிறகு வழக்கம்போல் தனது அதிரடியைக் காட்டத் தொடங்கிய அவர் அடுத்த 28 பந்துகளில் இரண்டாவது அரைசதத்தை விளாசினார். 100-வது பந்தில் அவர் 100 ரன்களை எட்டினார்.

அடுத்த 25 பந்துகளில் 3-வது அரைசதம்:

100 ரன்களைத் தாண்டிவிட்டால் ரன் குவிக்கும் வேகத்தை ரோஹித் சர்மா மேலும் அதிகரிப்பார். இவருடன் சிறப்பான பாட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 66 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் அதிரடி காட்டிய அவர 125-வது பந்தில் 3-வது அரைசதத்தை எட்டுவார்.

அடுத்த 26 பந்துகளில் 4-வது அரைசதம்:

சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் அதிரடி காட்டி ஆட்டமிழக்க, ராபின் உத்தப்பா ஸ்டிரைக்கை ரோஹித் சர்மாவிடம் கொடுத்து விளையாடினார். ரோஹித்தும் அதே பாணியைக் கடைப்பிடித்து பவுண்டரிகளாக விளாச 151-வது பந்தில் 4-வது அரைசதத்தை எட்டினார்.

இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற மிரட்டல் சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

தோனி ட்வீட்:

ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லையெனில் 250 ரன்கள் எடுப்பார் என மகேந்திர சிங் தோனி ட்விட்டரில் பதிவிட, ஆட்டத்தில் விறுவிறுப்பு மேலும் பற்றிக்கொண்டது.

அடுத்த 15 பந்துகளில் 5-வது அரைசதம்:

தோனியும் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில் மிரட்டலைத் தொடர 166-வது பந்தில் பவுண்டரி அடித்து 5-வது அரைசதம், அதாவது 250 ரன்களைத் தாண்டினார் ரோஹித் சர்மா. ரோஹித் ஆட்டத்தைப் பார்த்த பிறகும் நாம் பேட்டிங் செய்வதா? என்கிற எண்ணத்தில் உத்தப்பா தொடர்ந்து ஸ்டிரைக்கை ரோஹித்திடமே கொடுத்து வந்தார்.

264:

கடைசி ஓவரின் கடைசி பந்து வரை ரோஹித் சர்மா களத்தில் இருந்ததால், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தனை ரன்கள் அடித்த பிறகும் அணிக்காக கடைசி பந்தையும் சிக்ஸருக்கு அனுப்ப முயன்று பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.

ஆட்டத்தில் 173 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 33 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் உள்பட 264 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனையைப் படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அடிப்பது என்பதே பெருங்கனவு. அதை இரண்டாவது முறையாக அடிக்க முடியுமா என்பது அதைவிடப் பெருங்கனவு. ஆனால், ரோஹித் சர்மாவோ அதை ஏதோ அரைசதம் அடிப்பதைப்போல இரண்டாவது முறையாக அடித்து, 200 ரன்கள் போதாது என்று 250-ஐ தாண்டியும் குவித்திருப்பது வரலாற்றில் என்றும் நினைவில் இருக்கக்கூடிய மகத்தான சாதனை.

இந்த சாதனை அரங்கேறியது, சரியாக 7 ஆண்டுகளுக்கு இதே நாளில்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com