நவம்பர் 16: சச்சின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்!

சச்சின்... சச்சின்... என்ற உங்களின் முழக்கம் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை...
நவம்பர் 16: சச்சின் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்!

1989-ல் அறிமுகமான சச்சின், ஒரு வருடத்தில் நியூசிலாந்தில் 80 ரன்கள் எடுத்தார். 91-92-ல் இங்கிலாந்தில் தனது முதல் சதத்தை எடுத்தார். உலகத் தரமான பேட்ஸ்மேனாக கிரிக்கெட் உலகம் அவரைக் கருதியது. 17 வயதில் மிகச்சிறந்த பந்துவீச்சுகளை அடித்தாடினார். எங்கள் அணியில், சச்சின் வேற மாதிரி என நாங்கள் அனைவரும் அவரை உயர்வாக எண்ணினோம். 

96-97-ல் இந்திய அணி சச்சின் டெண்டுல்கரையே அதிகம் சார்ந்திருந்தது. ஏனெனில் அவர் எப்போதும் தொடர்ச்சியாக நன்றாக விளையாடி வந்தார். இந்தியாவின் முதல் பேட்ஸ்மேனாக ஆடுகளத்தில் அதிகாரம் செலுத்தி, நல்ல பந்துகளிலும் ரன்கள் எடுத்தார். அதுவரை இந்திய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி, மோசமான பந்துகளிலேயே ரன்கள் எடுத்து வந்தது. முதலில் பந்துவீச்சாளருக்கு மரியாதை அளித்து, அவர் சோர்வடைந்து மோசமாகப் பந்துவீசும்போது ரன்கள் எடுப்பார்கள். ஆனால் சச்சின் தான் முதலில் இருந்தே அடித்தாடினார். அவருக்குத் தோல்விகள் என்பது அரிதானது.

- சச்சின் டெண்டுல்கர் பற்றி முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியவை. சச்சினுடன் இணைந்து மஞ்ச்ரேக்கர் விளையாடியுள்ளதால் 90களின் இந்திய கிரிக்கெட் நிலவரத்தை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

தனது சொந்த மண்ணான மும்பையில் 2013 நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் சச்சின் டெண்டுல்கர். 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், ஒரே ஒரு டி20 ஆட்டம் என நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி தனது முத்திரையைப் பதித்தார். டெஸ்டில் 15,921 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார் சச்சின். இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர், சச்சின் தான். மூன்று வகை கிரிக்கெட் ஆட்டங்களிலும் 30,000 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் சேர்த்த ஒரே வீரர் சச்சின் மட்டுமே. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் எடுத்த ஒரே வீரர் சச்சின். அதேபோல டெஸ்டில் (51), ஒருநாள் கிரிக்கெட்டில் (49) அதிக சதங்கள் எடுத்த வீரரும் சச்சின் தான். மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியுமா?

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார் சச்சின். 2013 நவம்பர் 16-ல் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி மூன்றே நாள்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.

சச்சினின் கடைசி டெஸ்ட்டைக் காண அவருடைய தாய், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு விசேஷ நாணயம் பயன்படுத்தப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் இலச்சினையும், மறுபக்கத்தில் சச்சினின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருந்தன. டாஸ் போட்டபிறகு அந்த நாணயம் சச்சினிடமே வழங்கப்பட்டது.

அந்த டெஸ்டின் 4 மற்றும் 5-வது நாள்களில் சச்சினுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள், ஆட்டம் மூன்றே நாள்களில் முடிந்துபோனதால் அனைத்தும் அடியோடு ரத்தாகின. இந்த டெஸ்டில் 74 ரன்கள் எடுத்த சச்சினின் விக்கெட்டை கடைசியாக எடுத்தவர், ஆஃப் ஸ்பின்னர் நர்சிங் டியோநரேன். 

சச்சினின் கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று, பரிசளிப்பு விழா சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு பலத்த கரகோஷத்துக்கு இடையே பேச வந்தார் சச்சின். தன்னுடைய இறுதியுரையில், முதலில் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு நன்றி சொன்னார். பிறகு தன் குருவுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தினார். ‘சச்சின்... சச்சின்... என்ற உங்களின் முழக்கம் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை எனது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.’ என்று சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டபோது பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. இந்தக் காணொளியை இப்போது பார்த்தாலும் சச்சின் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். ஆடுகளத்தில் நிகழ்ந்த மகத்தான தருணம் அது. 

பிறகு, ஆடுகளத்தைத் தொட்டு வணங்கினார். வழக்கமாக ஓர் ஆட்டம் முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லும் ரசிகர்கள், அன்று மட்டும் பரிசளிப்பு விழா முடிந்த பிறகும் நகராமல் இருந்தார்கள். இனிமேல் சச்சினை ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மைதானத்தில் பார்க்கமுடியாது என்பதால் அவர் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் கண்கொட்டாமல் ரசித்தார்கள். ‘சச்சினின் கடைசி கிரிக்கெட் தினத்தை நான் நேரில் பார்த்தேன்’ என்கிற பெருமையும் சோகமும் அவர்களிடம் இருந்ததைக் காணமுடிந்தது.

இத்தருணம் பற்றி தனது சுயசரிதையான பிளேயிங் இட் மை வே-யில் எழுதியிருக்கிறார் சச்சின். அதில் அவர் கூறியதாவது:

என் இறுதியுரை நிகழ்த்தியபிறகு மிகவும் உணர்வுபூர்வமாக என் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, விராட் கோலி என்னிடம் வந்து, கடைசியாக பிட்ச் அருகே செல்வதற்கு ஞாபகப்படுத்த சொன்னீர்கள் என்றார். நான் மறக்கவில்லை. ஆனால் அந்தத் தருணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அதுதான் என்னை வளர்த்து. இத்தனை  ஆண்டு காலமாக நன்றாகப் பார்த்துக்கொண்ட 22 யார்ட் பிட்ச்சுக்கு நான் செல்லும் கடைசி தருணம். பிட்ச் முன்பு சென்றபோது என் தொண்டை அடைத்துக்கொண்டது. 15 நொடிகள்தான் பிட்ச் அருகே இருந்தேன். இத்தனை நாளாக என்னைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி என்று சொல்லி வணங்கினேன். கடைசியாக பெவிலியனுக்குச் சென்றபோது எல்லா ஞாபகங்களும் நினைவில் வந்து மோதின. என் பயிற்சியாளர் அச்ரேக்கரிடம் முதல் முதலாக பயிற்சி எடுத்துக்கொண்டது முதல் கடைசி டெஸ்டில் 74 ரன்கள் அடித்தது வரை என்று சச்சின் எழுதினார். 

சச்சினின் ஓய்வு பற்றி குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ், ‘கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெறுவது, மகாத்மா காந்தி இறந்த சம்பவத்துக்குச் சமம்’ என்று எழுதியது. ஆட்டம் முடிந்தபிறகு பேசிய தோனி, ‘சிறந்த முன்மாதிரியாக இருந்ததற்கு சச்சினுக்கு மிக்க நன்றி. அவர் வாழ்ந்த விதத்தைப் பார்க்கும்போது அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்று பேசினார். 

சச்சின் ஓய்வு பெற்ற சிலமணி நேரங்களில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது மத்திய அரசு. இந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டு வீரரும் இளையவரும் சச்சின் தான்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், சச்சினின் அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அவர் என்ன சொன்னாலும் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட் விதிகள், தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது எனத் தொடர்ந்து கிரிக்கெட் உலகுக்கு ஆலோசனைகளைச் சொல்லி வருகிறார். சச்சினுக்காகவே மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்கு ஆதரவு தருபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

சச்சின் தனது கடைசி டெஸ்ட் (2013), கடைசி ஒருநாள் (2012), ஒரேயொரு சர்வதேச டி20 (2006), கடைசி ஐபிஎல் (2013), கடைசி சாம்பியன்ஸ் லீக் ஆட்டம் (2013), கடைசி ரஞ்சி போட்டி (2013) என அனைத்திலும் வெற்றியோடே விடை பெற்றிருக்கிறார். இந்தப் பெருமை எல்லோருக்கும் கிடைத்ததில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com