டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக பல சாதனைகள் நிகழ்த்திய விராட் கோலி

டி20 கேப்டனாக 2 தொடர்களில் மட்டுமே தோற்றுள்ளார் கோலி. 
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக பல சாதனைகள் நிகழ்த்திய விராட் கோலி


டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக உள்ள விராட் கோலி, டி20 உலகக் கோப்பையுடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது உண்மையிலேயே இந்திய கிரிக்கெட்டுக்கு பேரிழப்பு தான்.

கோலியின் டி20 தலைமைப்பண்பை ஐபிஎல் போட்டியுடன் ஒப்பிட்டுப் பலரும் விமர்சனம் செய்வார்கள். ஆனால் ஐபிஎல் போட்டி என்பது நான்கு வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடும் ஒரு போட்டி. அதுவும் சர்வதேச கிரிக்கெட்டும் ஒன்றல்ல. 

2017-ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் விராட் கோலி. தோனி கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து கேப்டன் பதவி கோலிக்கு வழங்கப்பட்டது. முதல் டி20 தொடரை 2-1 என வென்றார் கோலி. இதன்பிறகு அவர் டி20 கேப்டனாகப் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

* கோலியின் தலைமையில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகளில் இந்திய அணி டி20 தொடரை வென்றுள்ளது. வேறு எந்த இந்திய கேப்டனுக்கும் இந்தப் பெருமை இல்லை. 

* கோலி தோற்ற டி20 தொடர்கள் மிகக்குறைவு தான். 2017-ல் மே.இ. தீவுகளில் கேப்டனாகத் தனது 2-வது டி20 தொடரில் 1-0 (1) எனத் தோற்றார் கோலி. 2019-ல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலியா, 2-0 (2) என டி20 தொடரை வென்றது. அவ்வளவுதான். ஒரு டி20 கேப்டனாக 2 தொடர்களில் மட்டுமே தோற்றுள்ளார் கோலி. 

* 2019-ல் நியூசிலாந்து சென்று விளையாடிய 5 டி20 ஆட்டங்களிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. 

* 2020-ல் ஒருநாள் தொடரில் தோற்றாலும் ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை வென்று அசத்தியது இந்திய அணி.

* இந்த வருடம் வலுவான இங்கிலாந்து அணியைச் சொந்த மண்ணில் 3-2 என வென்றது இந்திய அணி. 

அதிக வெற்றி விகிதம்

வெற்றி% - கேப்டன் (ஆட்டங்கள் - வெற்றி - தோல்வி - முடிவு இல்லை)

80.77% - அஷ்கர் ஆப்கன் (52-42-10-0)
64.44% - விராட் கோலி (45-29-14-2)
62.50% - டு பிளெஸ்சிஸ் (40-25-15-0)
60.94% - மார்கன் (64-39-24-1)
59.57% - டேரன் சாமி (47-28-17-2)
58.33% - தோனி (72-42-28-2)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com