3 மாதங்களுக்கு முன் ஜீரோ, தற்போது ஹீரோ! தன்னம்பிக்கையூட்டும் ஹார்திக் பாண்டியா!

கிண்டல் செய்த மும்பை ரசிகர்களே தற்போது பாராட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா.
3 மாதங்களுக்கு முன்பும் தற்போதும் ஹார்திக் பாண்டியா.
3 மாதங்களுக்கு முன்பும் தற்போதும் ஹார்திக் பாண்டியா.

ஹார்திக் பாண்டியா தனது 22 ஆவது வயதில் அதாவது 2015இல் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் அறிமுகமானார். 2015 முதல் 2021 வரை மும்பை அணிக்காக விளையாடினார். சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தார்.

காயம் காரணமாக 2018 ஆசியக் கோப்பையில் ஆடுகளத்தில் இருந்து ஸ்டெட்ச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். 2023 உலகக் கோப்பையிலும் பாதியிலேயே வெளியேறினார். இப்படி காயம் காரணமாக 2019 முதல் 60 சதவிகித ஒருநாள் போட்டிகளையும் டெஸ்ட்டில் 100 சதவிகிதமும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

பின்னர் 2020 செப்டம்பரில் அறுவைச் சிகிச்சை செய்து ஓராண்டு விளையாடாமல் இருந்தார். 2021 ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடாததால் மும்பை அவரை 2022 ஐபிஎல் போட்டிக்கு முன்பாக அணியிலிருந்து விடுவித்தது. பொது ஏலத்துக்கு சென்ற ஹார்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. மேலும் அந்த அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

காயத்தின்போது...
காயத்தின்போது...

2022 ஐபிஎல் கோப்பையை ஹார்த்திக் பாண்டியா தனது தலைமையில் வென்றார். முதல் தொடரிலேயே குஜராத் கோப்பையை வென்றது. பின்னர் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கும் தேர்வானது. நூலிழையில் சிஎஸ்கேவிடம் தோற்றது. இருப்பினும் ஹார்த்திக்கின் கேப்டன்சி (தலைமைப் பண்பு) அனைவரையும் வியக்க வைத்தது. இதேவேளையில் 2-3 வருடமாக மும்பை அணி மோசமாக விளையாடி வந்ததால் ரோஹித்துக்குப் பதிலாக ஹார்த்திக்கை கேப்டனாக்கியது மும்பை அணி நிர்வாகம்.

இந்தத் திடீர் மாற்றம் மும்பை மற்றும் ரோஹித் ரசிகர்களிடையே வெறுப்பாக மாறியது. இந்தக் காரணங்களால் மும்பை ரசிகர்கள் ஐபிஎல் போட்டியின்போது பாண்டியாவை மிகவும் கிண்டல் செய்தனர். அதற்கேற்றாற்போல் அவராலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

ஐபிஎல் போட்டியின்போது...
ஐபிஎல் போட்டியின்போது...படங்கள்: எக்ஸ்

ஐபிஎல் முடிந்த பிறகு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது பாண்டியாவுக்கு. அவரது மனைவி விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் அவரது 70 சதவிகித சொத்தும் அவரது மனைவிக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான. இது குறித்து இருவருமே எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் தனது மகன் விடியோவை தந்தையர் தினத்துக்கு பகிரும்போது பாண்டியா அவரது மனைவி புகைப்படத்தினை பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் ஹார்திக் பாண்டியா.
மனைவியுடன் ஹார்திக் பாண்டியா.

இப்படியான மோசமான நிலைமையில்தான் பாண்டியா ஐபிஎல் விளையாடியிருக்கிறார். அணியின் தோல்வியின்போதும் பந்துவீச்சாளர்கள் யாரையும் குறைகூறாமல் பேசியவிதம் நல்ல தலைமைப் பண்புக்கு அடையாளமானது.

வெற்றிவரும் வேளையைவிட தோல்வியின்போது ஒரு கேப்டன் / மனிதன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதே அவனது ஆளுமைப் பண்பினை வெளிக்கொணரும். ஹார்திக் 100 சதவிகிதம் சிறந்த கேப்டன், சிறந்த மனிதன் என்பதை கடந்த 3 மாதங்களில் அவரது செயல்கள் நிரூபித்துள்ளன!

மோசமான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதைவிடவும் முக்கியம் இந்தியா கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய காரணமும் இவர்தான்.

இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி மன்னன் கிளாசன் அட்டகாசமாக விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஆஃப் சைடு பந்தினை விசீ விக்கெட்டினை எடுத்து போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவையானதிருக்கும்போது மில்லரினை முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பார். 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கோப்பையை வென்றது.

நேற்று மும்பை வான்கடேவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரோஹித் சர்மா பாண்டியானை புகழ்ந்து அவருக்காக “தலை வணங்குகிறேன்” என்றார். உடனே வான்கடே மைதானம் பாண்டியாவின் பெயரினை உச்சரித்து ஆர்ப்பரித்தது. வெறுப்பினை உமிழ்ந்த மக்களிடையே அன்பைப் பெறுவது சாதாரணமானது இல்லை. ஜீரோவாக இருந்தவர் 3 மாதங்களில் ஹீரோவாக மாறுவது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நடக்கிறது.

கோப்பையுடன் ஹார்திக் பாண்டியா
கோப்பையுடன் ஹார்திக் பாண்டியா

தன்னம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதே ஹார்த்திக் பாண்டியாவின் வாழ்க்கை சொல்லும் செய்தி. இந்தக் காலக் கட்டத்தினை சினிமாவாக எடுக்கலாம். தோனிக்குப் பிறகு இப்படியான சினிமா மாதிரியான வாழ்க்கை ஹார்திக் பாண்டியாவுக்கு அமைந்துள்ளது. ஹார்திக் பாண்டியாவின் எழுச்சி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமே தன்னம்பிக்கையைத் தருகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com