2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீழ்ச்சி குறித்து...
Abhinav Mukund, Abhimanyu Easwaran, Kaijen Poster, Indian team (with coaches in the middle).
அபினவ் முகுந்த், அபிமன்யு ஈஸ்வரன், கைஜென் போஸ்டர், இந்திய அணி (நடுவில் பயிற்சியாளர்கள்). படங்கள்: அமேசான், ஏபி, எக்ஸ் / அபினவ் முகுந்த், அபிமன்யு ஈஸ்வரன்.
Updated on
2 min read

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜப்பானின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவராக தொழிலதிபரும் எழுத்தாளருமான மசாகி இமாய் இருக்கிறார். இவர் உருவாக்கிய தத்துவம்தான் ’கைஜென் - Kaizen’.

இது ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். கை- மாற்றம், ஜென் - சிறந்ததுக்கானது. இதன் முழுமையான பொருள் சிறந்ததுக்கான முன்னேற்றம் அல்லது தொடர்ச்சியான முன்னேற்றம்.

தற்போதைக்கு இந்திய அணிக்கு தேவையானது இந்த கைஜென் தத்துவம்தான். இந்தத் தத்துவத்தின்படி PDCA - Plan, Do, Check, Action என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்திய அணி 2025-இல் செய்த தவறுகளையும் தீர்வுகளையும் இதனடிப்படையில் பார்க்கலாம்...

Plan - ஒரு பொருளை தயாரிக்கும்போது ஏற்படும் பிரச்னைக்கான மூலக் காரணத்தை கண்டறிய வேண்டும் என்பதுதான் இதன் முதல் விதியே. பிறகு அந்தப் பிரச்னைக்கான தீர்வாக அடுத்தக்கட்ட திட்டமிடலை செய்ய வேண்டும் என மசாகி இமாய் கூறுகிறார்.

2025-இல் இந்திய அணி 10 போட்டிகளில் 5 தோல்விகள், 4 வெற்றிகள் (காலம்போன மே.இ.தீ, இங்கிலாந்துடன்) 1 டிரா செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இன்னும் மூலக்காரணத்தையே கண்டறியவில்லை என்பதுதான் சோகமாக இருக்கிறது. ஐபிஎல் நட்சத்திரங்களை எல்லாம் டெஸ்ட் அணியில் எடுத்ததுதான் வீழ்ச்சிக்கான மூலக்காரணம்.

இன்னும் சொல்லப்போனால், கௌதம் கம்பீரை பயிற்சியாளராக நியமித்தபோதே இது தொடங்கியது எனலாம்!

சரி, கம்பீர் எப்படி இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறினார் ஞாபகம் இருக்கிறதா? கேகேஆர் ஐபிஎல் கோப்பையை வென்றதால்... அப்படி பார்த்தாலும் இந்தப் பெயர், புகழ் எல்லாம் கேகேஆரின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டுக்குதானே சென்றிருக்க வேண்டும்? பிறகெப்படி கம்பீர் வந்தார்? பாஜகவின் லாபியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது... காற்றைப்போல அரசியல் இல்லாத இடமே இல்லையோ என்னவோ...

முன்பெல்லாம் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால் இந்திய அணியில் இடம் கிடைக்கும். இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதுமானதாக இருக்கிறது.

Do - எந்தவொரு சரியான திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். அதனைச் செய்யாவிட்டால் அதன் பின்விளைவுகளை செக் பகுதியில் நாம் சந்தித்தபிறகாவது மாற்ற வேண்டும்.

தற்போதைய ஐபிஎல் நட்சத்திரங்களால் ஃபிளாட்டான விக்கெட்டில் மட்டுமே ரன்கள் குவிக்க முடிகிறது. அது அவர்களுடைய குறையாகச் சொல்ல முடியாது. அவர்கள் வேகமான டி20 கிரிக்கெட்டிற்கு பழக்கப்பட்டவர்கள். அவர்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பது யார் தவறு?

145 முதல்தர போட்டிகளில் 10,258 ரன்களை குவித்துள்ள அபினவ் முகுந்த் (தமிழ்நாடு) , 104 முதல்தர போட்டிகளில் 7,841 ரன்கள் குவித்துள்ள அபிமன்யூ ஈஸ்வரன் (உத்தரகாண்ட்) போன்ற ரஞ்சி கோப்பை வீரர்களை புறக்கணித்ததன் விளைவுதான் இந்தப் படுதோல்விகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

Check - நியூசிலாந்திடம் 3-0, தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியுற்றிருக்கிறது. ஏன் என்று இதுவரை கௌதம் கம்பீர் சோதித்து இருக்கிறாரா? அல்லது பிசிசிஐ அவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறதா?

கடைசி சீசனில் ஆஸ்திரேலிய அணியிடம் 3-2 என தோற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு முன்னேறாமல் இருந்தோம். டெஸ்ட்டில் படுமோசமாக விளையாடும் இங்கிலாந்துடன் 2-2 என சமன் செய்தோம். இதையெல்லாம் கம்பீர் சிந்தித்தாரா?

தற்போதைய அணியின் நிலைமையை மறுசீராய்வு செய்ய வேண்டாமா? கம்பீர் சரியான பயிற்சியாளர்தானா? அவருக்குப் பயிற்சியாளராக எவ்வளவு கால அனுபவம் இருக்கிறது? எத்தனை தகுதிச் சான்றிதழ்கள் இருக்கின்றன?

இதையெல்லாம் சோதிக்க வேண்டிய நேரமிது. இப்போதும் செய்யாவிட்டால், இன்னும் பல மோசமான சாதனைகளுக்கு இந்திய ரசிகர்கள் தயாராக வேண்டியதுதான்.

Act - இதுவரையான தவறுகளுக்கு கம்பீரிடம் இருந்து எந்த லாஜிக்கான நடவடிக்கையும் இல்லை. பேட்டிங் வரிசையைக் கண்டபடி மாற்றுகிறார்.

யார் எந்த இடத்தில் ஆட வேண்டும் என்ற புரிதல் இல்லை; அனைவருமே அனைத்து இடத்திலும் விளையாடலாம் என்பதே தவறான ஒரு அணுகுமுறை. ஏபி டி வில்லியர்ஸ், டிராவிஸ் ஹெட் போல ஒரு சிலருக்கு மட்டுமே அந்தமாதிரியான திறன் இருக்கும்.

ஒருவர் 10 வயதிலிருந்து 25 வரை ஒரு மாதிரி ஒரு விஷயத்தை செய்துவிட்டு திடீரென மாற்றினால் எப்படி? Muscle Memory என ஒன்று இருக்கிறது. அது விளையாட்டில் மிக மிக முக்கியம்.

தொடக்க வீரருக்கு பவுன்சர், ஸ்விங் பந்துகள் ஆட வேண்டிய நிர்பந்தம் இருக்கும். ஆனால், நம்.4-இல் விளையாடுபவர்களுக்கு அது தேவைப்படாது. அங்கு வேறுமாதிரியான சவால்கள் இருக்கும்.

டெஸ்ட்டில் கோலோச்சும் ஆஸ்திரேலிய அணியை சான்றாக எடுத்துக்கொள்வோம். அதில் பிபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 அணிக்குத் தேர்வாகிறார்கள்.

உள்ளூர் போட்டியான ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் யார் நன்றாக விளையாடினாலும் டெஸ்ட் அணிக்குத் தேர்வாகிறார்கள். இந்த ஜனநாயகம் அங்கிருக்கிறது.

தேசிய அணியில் சரியாக விளையாடவில்லையா, அணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். அவர்கள் ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிக்கிறார்கள். சமீபத்தில் அப்படித்தான் மார்னஸ் லபுஷேன் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

அந்தமாதிரியான நடைமுறைகள் இந்திய அணியில் பேச்சுக்குக் கூட இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் கோலி, புஜாரா, ரஹானே மாதிரியான வீரர்கள் இன்னமும் அணியில் இருந்திருப்பார்கள்.

முறையான நடைமுறை இல்லாததே அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கைஜென் விதிகளை சரியாகப் பயன்படுத்தினால் இந்தியாவை வெல்ல எந்த அணியாலும் முடியாது... இல்லையேல் 2025 போல இந்தியாவுக்கு படுதோல்விகளே எஞ்சும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com