இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? அபினவ் முகுந்த் பதில் 

இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா? அபினவ் முகுந்த் பதில் 

தொடக்க வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அப்போது முகுந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று...

ஐந்து  வருடங்களுக்குப் பிறகு அபினவ் முகுந்த் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதா? இதுதான் பலருடைய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக 2011-ல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் முகுந்த். அதன்பிறகு அவர் இந்திய அணிக்குத் தேர்வாகவேயில்லை.

இந்த வருட ரஞ்சிப் போட்டியில் தமிழக அணி சிறப்பாக விளையாடிவருகிறது. பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து குரூப் ஏ பிரிவில் 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

தமிழக அணி வீரர் அபினவ் முகுந்த் பட்டையைக் கிளப்பிக்கொண்டுவருகிறார். இதுவரை 3 சதம், ஒரு அரை சதம் என அவர் தொட்டதெல்லாம் ரன்களாகிறது. 5 போட்டிகளில் 438 ரன்கள் எடுத்துள்ளார். இத்தனைக்கும் இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அவர் 13-வது இடத்தில் இருந்தாலும் மீண்டும் இந்திய அணியில் தேர்வாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. 

ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணியில் ராகுல், தவன் ஆகியோர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்கள். இந்நிலையில், மீண்டும் தொடக்க வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அப்போது முகுந்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து முகுந்த் பேட்டியளித்ததாவது: கடந்த 6 வருடங்களாக நான் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இப்படி ஆனது உண்மையிலேயே கடினம்தான். கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட் வீரராக நான் மாறிவிட்டேன். அதில் தொடர்ந்து என் திறமையை வெளிபப்டுத்துவேன். அதையும் தாண்டி நான் இந்திய அணிக்குத் தேர்வானால் அது நல்லதுதான். நான் கடினமாக உழைக்கிறேன். அதேசமயம் இந்திய அணிக்குத் தேர்வாவது குறித்து நான் மிகவும் யோசிக்கவிரும்பவில்லை என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com