3-வது டெஸ்ட்: விராட் கோலி அபார சதம்; இந்தியா 267/3

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. 
3-வது டெஸ்ட்: விராட் கோலி அபார சதம்; இந்தியா 267/3

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது.

இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் வென்றுள்ள இந்திய அணி, 3-வது டெஸ்டிலும் வென்று நியூஸிலாந்து அணியை "ஒயிட் வாஷ்' ஆக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. டாஸ் வென்ற விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், புவனேஸ்வருக்குப் பதிலாக கம்பீர், உமேஷ் யாதவ் இடம்பிடித்தார்கள்.

முரளி விஜயுடன் தொடக்க வீரராக கெளதம் கம்பீர் களமிறங்கினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிற கம்பீருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். இதில் சிறப்பாக ஆடி ரன் குவிக்கும்பட்சத்தில் இந்திய அணியில் கம்பீர் தனது இடத்தை தக்கவைக்க முடியும்.

மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கினார்கள் முரளி விஜய்யும் கம்பீரும். ஆனால் 2 பவுண்டரிகள் அடித்த விஜய், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது ஓவரில் போல்ட்டின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் கம்பீர். கவனமாக ஆடிவந்த கம்பீர் 53 பந்துகளில் 29 ரன்களை எடுத்து எல்பிடபிள்யூ முறையில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின்போது இந்திய அணி 26 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது.

மிகவும் உற்சாகமாக ஆடிவந்த புஜாராவை அற்புதமான பந்தினால் வீழ்த்தினார் சேண்ட்னர். புஜாரா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு வந்த ரஹானே, கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார். இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவந்தது. 

இதன்பிறகு ஆட்டம் தொடங்கியபோது 108 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கோலி. மறுபக்கம் ரஹானேவும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இருவரும் சற்று வேகமாக ஆட ஆரம்பித்தார்கள். இந்தூரில் இன்று டெஸ்ட் போட்டியைப் பார்க்க வந்த 20,000 ரசிகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது அவர்களுடைய ஆட்டம். ரஹானே 123 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சுமாராக ஆடிய கோலி, இந்தப் போட்டியில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினார். 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் சதத்தை எட்டினார். முதல்நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 103, ரஹானே 79 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com