உலக சாதனையைத் தவறவிட்டது எப்படி? மகாராஷ்டிர வீரரின் விநோதமான விளக்கம்!

இன்னும் கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தால் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்கிற உலக சாதனையை...
உலக சாதனையைத் தவறவிட்டது எப்படி? மகாராஷ்டிர வீரரின் விநோதமான விளக்கம்!

இன்னும் கூடுதலாக 30 ரன்கள் எடுத்திருந்தால் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்கிற உலக சாதனையை நிகழ்த்தியிருக்கமுடியும். ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் மகாராஷ்டிர ரஞ்சி அணியின் கேப்டன் குகாலே.

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ரஞ்சி போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த குகாலே - அன்கித் பாவ்னே ஆகிய இரு  வீரர்களும் உலக அளவிலான சாதனையைத் தவறவிட்டாலும் ரஞ்சி போட்டியில் ஒரு சாதனை செய்துள்ளார்கள்.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும் 594 ரன்கள் சேர்த்தார்கள். ரஞ்சி போட்டியில் எந்தவொரு விக்கெட்டுக்கும் இவ்வளவு ரன்களை யாரும் குவித்ததில்லை. இதற்கு முன்பு 1946-47ல் பரோடாவைச் சேர்ந்த விஜய் ஹசாரே - குல் முகமது ஜோடி, 577 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. அதை குகாலே - அன்கித் பாவ்னே ஜோடி முறியடித்துள்ளது.  மகாராஷ்டிரா அணி 635 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ததால் இவர்களால் மேலும் பல சாதனைகளைச் செய்யமுடியாமல் போனது. குகாலே 351, அன்கித் பாவ்னே 258 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

முதல்தர கிரிக்கெட்டில் மூன்றாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்ததில் இந்த ஜோடி, இரண்டாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சங்ககராவும் ஜெயவர்தனேவும் 624 ரன்கள் சேர்ததே இன்னும் சாதனையாக உள்ளது. முதல்தர கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்ததும்ம் இவர்கள்தான். எனவே, நேற்று இன்னும் 30 ரன்கள் எடுத்திருந்தால் மகாராஷ்டிர வீரர்களால் உலக சாதனை நிகழ்த்தியிருக்கமுடியும்.

குகாலே அணியின் கேப்டனாக இருந்தபோதும் அவர் ஏன் இம்முடிவை எடுத்தார்? நேற்றைய ஆட்டம் முடிந்தபிறகு இதற்குரிய விளக்கம் அளித்தார் குகாலே. இன்றைய இணைய உலகத்தில் இப்படிப் பேசுகிறாரே என்றுதான் எல்லோருக்கும் தோன்றியது. குகாலேயின் விளக்கம்:

ஆட்டம் முடிந்தபிறகுதான் சாதனையைத் தவறவிட்டது எனக்குத் தெரிந்தது. அதற்குமுன்பு, இதுபற்றி எனக்குத் தெரியாது. என் செல்போனுக்கு 100 மிஸ்டு கால்களும் 200 குறுஞ்செய்திகளும் வந்திருந்தன. அப்போதுதான் நாங்கள் உலக சாதனையைத் தவறவிட்டதை அறிந்தேன். இதனால் கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. சாதனை நிகழ்த்தியபிறகு டிக்ளேர் செய்திருக்கலாம். ஆயினும் கேப்டனாக உள்ள நான் தான் அம்முடிவை எடுத்தேன். எனவே இதுகுறித்து எந்தப் புகாரும் இல்லை. டெல்லி அணியினர் என்னிடம் வந்து. இவ்வளவு நேரம் விளையாடுகிறீர்களே, போர் அடிக்கவில்லையா என்று கேட்டார்கள். பேட்டிங் செய்ய யாருக்கு போர் அடிக்கும் என்று பதிலளித்தேன்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com