சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: டிமிட்ரோவ், முகுருஸா சாம்பியன்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் சாம்பியன்
சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: டிமிட்ரோவ், முகுருஸா சாம்பியன்

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை தோற்கடித்தார்.
இதன்மூலம் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் சாம்பியன் பட்டம் வென்றார் டிமிட்ரோவ். ஒட்டுமொத்தத்தில் அவர் வென்ற 7-ஆவது பட்டம் இது. அதேநேரத்தில் இந்த ஆண்டில் மூன்றாவது பட்டம் வென்றுள்ளார். முன்னதாக பிரிஸ்பேன் மற்றும் பல்கேரிய ஓபன்களில் அவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்துப் பேசிய டிமிட்ரோவ், 'எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி இது. அடுத்த இரண்டு நாள்கள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துவிட்டு, அதன்பிறகு அமெரிக்க ஓபன் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடவுள்ளேன்' என்றார். தோல்வி குறித்துப் பேசிய நிக் கிர்ஜியோஸ், 'இறுதி ஆட்டத்தில் நான் தோற்றுவிட்டேன். எனினும் இப்போது இங்கு நிற்பதை பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.
முகுருஸா வெற்றி: மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார்.
ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய முகுருஸா 56 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்த ஆண்டில் முகுருஸா வென்ற 2-ஆவது பட்டம் இது. ஒட்டுமொத்தமாக அவர் வென்ற 5-ஆவது பட்டமாகும். வெற்றி குறித்துப் பேசிய முகுருஸா, 'சைமோனாவின் இடத்துக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் இந்தப் போட்டியை வெல்ல விரும்பினேன். நினைத்தது போலவே வென்றுவிட்டேன்' என்றார்.
இந்தப் போட்டியில் தோற்றதன் காரணமாக சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்தார் சைமோனா ஹேலப். அவர், இதுபோன்று தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை இழப்பது இது மூன்றாவது முறையாகும்.
தோல்வி குறித்துப் பேசிய சைமோனா, 'நான் இந்த ஆட்டத்தில் மிக மோசமாக ஆடியபோதும் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. எனது ஆட்டம் மோசமாக அமைந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு வலுவான வீராங்கனையாக இங்கு களமிறங்குவேன். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயற்சிப்பேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com