துபை ஓபன்: இறுதிச்சுற்றில் சிந்து தோல்வி

துபை சூப்பர் சீரிஸ் ஃபைனல் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டார்.

துபை சூப்பர் சீரிஸ் ஃபைனல் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டார்.
துபையில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொண்டார் சிந்து.
இருவருக்கும் இடையே ஒரு மணி 31 நிமிடங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் சிந்து முதல் செட்டை வசமாக்கி அருமையாகத் தொடங்கினார். எனினும், 2-ஆவது செட்டில் மீண்ட யமாகுசி, 3-ஆவது செட்டையும் கைப்பற்றி வாகை சூடினார்.
இந்த ஆட்டம் 15-21, 21-12, 21-19 என்ற கணக்கில் அவர் வசமானது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் யமாகுசியிடம் சிந்து தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் சிந்து விளையாடிய 4-ஆவது இறுதிச்சுற்று இதுவாகும்.
இதில் சிந்து பட்டம் வென்றிருக்கும் பட்சத்தில், உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார்.
தோல்விக்குப் பிறகு சிந்து கூறியதாவது: நீண்ட ரேலிகளை விளையாடுவது யமாகுசியின் விளையாட்டு முறையாகும். அதற்காக தகுந்த முறையில் தயாராகியிருந்தேன். அவருக்கு எதிரான இந்த ஆட்டம் நீண்டதாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். இந்த ஆட்டம் நஜோமி ஒகுஹராவுக்கு எதிரான ஒன்றைப் போலவே அமைந்தது.
இந்த ஆண்டு அருமையான ஒன்றாக இருந்தது. முக்கியமான போட்டி ஒன்றில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்த ஆண்டை நிறைவு செய்துள்ளேன். இதே உத்வேகத்துடன் அடுத்த ஆண்டிலும் போட்டிகளை எதிர்கொள்வேன் என்று சிந்து கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com