5 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகத்தை வீழ்த்தி ரஞ்சி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது விதர்பா!

5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக ரஞ்சி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி...
5 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகத்தை வீழ்த்தி ரஞ்சி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது விதர்பா!


கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி அரையிறுதி ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக ரஞ்சி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது விதர்பா அணி.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த விதர்பா 61.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சர்வதே 47 ரன்கள் அடித்தார். கர்நாடக தரப்பில் மிதுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகம் 100.5 ஓவர்களில் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 153 ரன்கள் விளாசினார். விதர்பா வீரர் குர்பானி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா 84.1 ஓவர்களில் 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 198 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய கர்நாடகம் புதன்கிழமை முடிவில் 43 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. இன்னும் 87 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அணியின் வசம் 3 விக்கெட்டுகளே இருந்தன. கேப்டன் வினய் குமார் 19, கோபால் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது விதர்பா அணி. கர்நாடக அணி 59.1 ஓவர்களில் 192 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பாவின் 24 வயது குர்பானி அசத்தலாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த ஆட்டத்தில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். விதர்பா அணி முதல்முறையாக ரஞ்சி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com