இன்று இங்கிலாந்துடன் 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், கடந்த 15-ஆம் தேதி புணேவில் நடைபெற்ற முதல் போட்டியில், 351 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப் பிடித்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஒடிஸா மாநிலம், கட்டக்கில் வியாழக்கிழமை பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணி, 63 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, இக்கட்டான நிலையில் இருந்தபோது, கேப்டன் விராட் கோலியும், கேதார் ஜாதவும் பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதிரடியாகவும் ரன் குவித்து வெற்றிக்கு உதவினர்.
கேப்டன் கோலி, ஒரு நாள் போட்டியில் இரண்டாவது பேட்டிங்கில் அதிக சதமடித்தவர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் (17 சதம்) சாதனையை சமன் செய்தார். மேலும், வெற்றி இலக்காக 350-க்கும் அதிகமான ரன்களை 3 முறை எட்டிப் பிடித்த ஒரே அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் கோலி சதமடித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்றொரு இளம்வீரரான கேதார் ஜாதவ், அணியின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். கடந்த ஆட்டத்தில் அவர் 65 பந்துகளில் சதமடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதேநேரத்தில், அனுபவ வீரர்கள் யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி ஆகியோர் கடந்த முறை சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்த முறை அவர்கள் நிலைத்து ஆடி, அணிக்கு வலுசேர்க்க வேண்டும். மேலும், இடது கை ஆட்டக்காரரான தொடக்க வீரர் ஷிகர் தவண் கடந்த முறை ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த் ஆகியோர் அணிக்கு திரும்ப காத்திருக்கும் வேளையில் ஷிகர் தவண் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவாவது அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்துவீச்சைப் பொருத்தவரையில், இந்திய வீரர்கள் மேலும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. இங்கிலாந்து அணியிலும் பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினர். இருப்பினும், ஆட்டத்தின் பிற்பகுதியில் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். பென் ஸ்டோக்ஸ் (62 ரன்கள், 40 பந்து) பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சில் (2 விக்கெட்/73 ரன்கள்) கவனம் ஈர்க்கவில்லை. மொத்தத்தில் கடந்த ஆட்டத்தில் கோலியும், ஜாதவும் சுமார் 25 ஓவர்கள் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். குறிப்பாக விராட் கோலியை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்ற குழப்பத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தவிக்கின்றனர். ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கோலியின் இந்திய படையிடம் 0-4 என்ற கணக்கில் பறிகொடுத்தது இங்கிலாந்து வீரர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர்களிடம் இருக்கும் ஒரே ஆறுதல் பேட்டிங் பலம். எனவே, பந்துவீச்சில் தேவையான மாற்றத்தை இங்கிலாந்து வீரர்கள் செய்துகொள்ளும் பட்சத்தில் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் கடும் சவாலாக விளங்கும்.
ஆனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், தொடரை இந்தியா கைப்பற்றிவிடும். எனவே, இந்திய வீரர்கள் அவ்வளவு எளிதில் விட்டுத்தர மாட்டார்கள் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. போட்டி நடைபெறும் ஒடிஸாவின் பாராபட்டி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.
இரு அணி உத்தசே வீரர்கள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவண், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பூம்ரா, உமேஷ் யாதவ், அஜிங்கியா ரஹானே, மணீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா.
இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷீத், ஜேக் பால், லியாம் டாவ்சன், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளென்கெட்.
போட்டி நேரம்: பிற்பகல் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com