பிசிசிஐ நிர்வாகிகள்: ஜன.24-இல் அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கான உறுப்பினர்களை வரும் 24-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
பிசிசிஐ நிர்வாகிகள்: ஜன.24-இல் அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கான உறுப்பினர்களை வரும் 24-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
அதுவரையில், நிர்வாகிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களின் பெயரை ரகசியமாக வைத்திருக்கமாறு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
பிசிசிஐ மறுசீரமைப்புக்காக, ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகக் கூறி, அதைச் செயல்படுத்த பிசிசிஐ மறுத்து வந்தது.
இதற்காக பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அதன் தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
அத்துடன், பிசிசிஐ அமைப்பை மேற்கொண்டு நிர்வகிக்க, புதிதாக நிர்வாகிகள் குழுவை அமைப்பதென உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.
இதற்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்யுமாறு, மூத்த வழக்குரைஞர்கள் அனில் திவான், கோபால் சுப்பிரமணியம் ஆகியோரை பணித்தது. இந்நிலையில், அவர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் நிர்வாகிகளை உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
தீர்ப்பில் மாற்றம்: இதனிடையே, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் தொடர்பான தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
முன்னதாக, பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் இருக்கும் ஒரு நபர் 9 ஆண்டுகளுக்கு மேல் பொறுப்பு வகிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அத்தகைய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் பணிக்காலம் ஒட்டுமொத்தமாக கணக்கிடப்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com