விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஃபெடரர், சிலிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் மரின் சிலிச்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் மரின் சிலிச்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
விம்பிள்டனில் 11-ஆவது முறையாக விளையாடி வரும் சிலிச், முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறார். அதேநேரத்தில் ரோஜர் ஃபெடரர் 11-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருக்கும் சிலிச் 6-7 (6), 6-4, 7-6 (3), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாம் கியூரியைத் தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் சிலிச் 25 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார்.
விம்பிள்டனில் இதுவரை சாம் கியூரியுடன் 4 முறை மோதியுள்ள சிலிச், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். வெற்றி குறித்து சிலிச் கூறியதாவது: எனது ஆட்டத்தை என்னாலேயே நம்ப முடியவில்லை. இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். அரையிறுதியைப் பொறுத்தவரையில் முதல் செட்டில் சாம் கியூரி அபாரமாக ஆடினார். அதில் டைபிரேக்கரில் ஒரு கட்டத்தில் நான் 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தேன். எனினும் என்னால் அந்த செட்டை கைப்பற்ற முடியவில்லை.
முதல் செட்டுக்குப் பிறகு எனது ஷாட்கள் அற்புதமாக இருந்தன. என்னுடைய ஆட்டம் உயர்தரத்தில் இருப்பதாக நினைத்தேன். அதனால் நேர்மறையான சிந்தனையோடு களத்தில் இருந்தேன். எப்போதுமே நேர்மறையான எண்ணம் மிக முக்கியமானதாகும். உணர்ச்சிவசப்படும் எனது சுபாவமும் எனது வெற்றிக்கு சிறிதளவு உதவியாக இருந்தது என்றார்.
இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய சிலிச், 'ஃபெடரர், பெர்டிச் இடையிலான அரையிறுதி ஆட்டம் மிகப்பெரிய போட்டியாகும். ஃபெடரர் தனது டென்னிஸ் வாழ்க்கையின் மிகச்சிறப்பான ஆட்டத்தை இங்கு ஆடி வருகிறார். இறுதிச் சுற்றில் யாருடன் விளையாடினாலும் அவர்களுடைய சவாலை சந்திக்க தயார்' என்றார்.
விம்பிள்டனில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் 2-ஆவது குரோஷியர் சிலிச் ஆவார். இதற்கு முன்னர் 2001-இல் குரோஷியாவின் கோரன் இவானிசெவிச் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரோஜர் ஃபெடரர் வெற்றி: மற்றொரு அரையிறுதியில் ரோஜர்
ஃபெடரர் 7-6 (4), 7-6 (4), 6-4 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் சிலிச்சை வீழ்த்தும்பட்சத்தில் விம்பிள்டனில் 8-ஆவது பட்டத்தைக் கைப்பற்றுவார் ஃபெடரர். இதன்மூலம் விம்பிள்டனில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற வரலாற்று சாதனையைப் படைப்பதோடு, அதில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார் ஃபெடரர்.
காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி ஜோடி தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
இந்த ஜோடி 7-6 (4), 4-6, 5-7 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென்-பிரிட்டனின் ஹெதர் வாட்சன் ஜோடியிடம் தோல்வி கண்டது. போபண்ணா தோற்றதன் மூலம் விம்பிள்டனில் இந்தியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com