ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ்: முதல் சுற்றில் தோற்று விலகினார் நடால்

ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டதுடன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
விரக்தியுடன் வெளியேறும் நடால்.
விரக்தியுடன் வெளியேறும் நடால்.

ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டதுடன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
அந்தச் சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார் நடால். இந்த ஆட்டத்தில் 'டை-பிரேக்' வரை சென்ற முதல் செட்டை, டேவிட் கைப்பற்ற, 2-ஆவது செட்டில் மீண்ட நடால் அதை தன் வசமாக்கினார். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டையும் டேவிட் எளிதாக கைப்பற்றி 7-6(5), 6-7(7), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
குரூப் முறையிலான இந்தப் போட்டியில் அடுத்த ஆட்டங்களில் இதர வீரர்களை சந்திக்க இருந்த நிலையில் நடால் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீரர்கள் மட்டும் பங்கேற்கும் இந்தப் போட்டியில், நடால் இதுவரை ஒரு பட்டம் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனின் கடைசி போட்டியான இதை, நடால் தோல்வியுடன் நிறைவு செய்துள்ளார்.
முழங்கால் காயத்தால் அவதியுற்று பாரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் இருந்து விலகிய நடால், இந்தப் போட்டியில் பங்கேற்பதிலும் சந்தேகம் நீடித்தது. எனினும், காயத்தின் தடம் இன்றி இப்போட்டியில் பங்கேற்ற நடால், ரவுண்ட் ராபின் சுற்றுகளில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தோல்விக்குப் பிறகு பேசிய நடால், 'இந்த சீசனில் என்னுடைய ஆட்டம் முடிந்துவிட்டது. முழு அர்ப்பணிப்புடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டேன். முழங்கால் காயத்துடன் போராடினாலும், கடுமையாக முயற்சித்து ஆடினேன். ஒரு கட்டத்தில் எனது சக்தியை இழந்துவிட்டேன். எனினும், நூலிழையில் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஆச்சரியமளிக்கிறது.
முழங்கால் வலியை உணருகையில் உண்மையில் நான் விளையாடத் தயாராகவில்லை எனத் தெரிகிறது' என்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய டேவிட் கோஃபின் கூறுகையில், 'ஆட்டம் இறுதிவரை கடினமானதாக இருந்தது. நடால் போன்ற ஒரு பலம்வாய்ந்த வீரரை வீழ்த்தியதில் மகிழ்ச்சி' என்றார்.
நடால் விலகலை அடுத்து, இந்தப் போட்டியில் ஒரே நட்சத்திர வீரராக ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மட்டும் நீடிக்கிறார்.
டிமிட்ரோவ் வெற்றி: இதனிடையே, மற்றொரு குரூப் சுற்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com