இலங்கை 183 ரன்களுக்கு ஆல் அவுட்! அஸ்வின் 5 விக்கெட்டுகள்!

இலங்கை அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆனை எதிர்கொண்டுள்ளது...
இலங்கை 183 ரன்களுக்கு ஆல் அவுட்! அஸ்வின் 5 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனால் அந்த அணி ஃபாலோ ஆனை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் சதமடித்தனர். ந்தியா 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் கோலி. அப்போது ஜடேஜா 85 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 70, உமேஷ் யாதவ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இலங்கை அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. மென்டிஸ் 16, சன்டிமல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது இந்திய அணியின் பந்துவீச்சை இலங்கை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளத் தடுமாறினார்கள். முதலில் சண்டிமலை 10 ரன்களில் வெளியேற்றினார் ஜடேஜா. இன்று அவருடைய பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. மெண்டிஸ் 24 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதனால் இலங்கை அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் மேத்யூஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றார். 33 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். புஜாரா அந்த கேட்ச்சை அற்புதமாகப் பிடித்து அசத்தினார். டி சில்வா ஜடேஜா பந்துவீச்சில் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆனார். இது ஜடேஜாவின் 150-வது டெஸ்ட் விக்கெட். 

மேத்யூஸ் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிக்வெல்லா, 48 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து சமி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து 2 ரன்களில் ஹெராத்தையும் போல்ட் ஆக்கினார் சமி. கடைசியாக பெரேராவை 25 ரன்களில் போல்ட் ஆகி வெளியேற்றினார் அஸ்வின்.

இதனிடையே இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ள பிரதீப் அணியின் நலனுக்காக பேட்டிங் செய்யவந்தார். ஆனால் அவர் ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது அஸ்வினின் 5-வது விக்கெட்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆகியுள்ளது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும் ஜடேஜா, சமி தலா 2 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 439 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com