நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி: கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா?

முதல் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி: கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா?

2013ம் ஆண்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. இங்கிலாந்தில் நடைபெற்ற மினி உலகக்கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இந்திய அணி வெல்லும் என யாருமே எண்ணவில்லை. ஆனால் இளம் வீரர்களைக் கொண்ட தோனி தலைமையிலான இந்திய அணி சாதித்துக் காண்பித்தது. அதேசமயம், இந்தமுறை பலம் வாய்ந்த அணிகளுக்கு மத்தியில் இந்திய அணி கோப்பையைத் தக்கவைக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த முறை (2013-இல்) சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வாகை சூடியது. இந்த முறையும் கோப்பையை வெல்லும் தகுதி அந்த அணிக்கு உள்ளதாகவே கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மிக வலுவாக உள்ளதால் இந்திய அணி அதனைக் கொண்டு பல வெற்றிகளைப் பெறும் என்று கணிக்கிறார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சுக்குக் கூடுதல் பலம் அளிக்கிறார்கள். 

ஐபிஎல் போட்டியில் திணறிய விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீள்வார் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஐபிஎல் போட்டியில் சோபிக்காமல் போன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் மூலம் மீண்டு வருவார். ஒரு சிறந்த வீரர் எப்போதும் வீழ்ந்த நிலையிலேயே இருக்க மாட்டார். அந்த வகையில் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, தான் சிறந்த வீரர் என்பதை மீண்டும் இந்த உலகத்துக்கு காட்டுவார்.  என்று ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம்தான். அதேநேரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பலரும் கணிக்கிறார்கள். இதில் உள்ளூர் அணியான இங்கிலாந்து அணியே கோப்பையை வெல்லும் என்பது பலருடைய கணிப்பு. ஆனால் ஹஸ்ஸியின் கருத்து இவ்வாறாக உள்ளது: இந்திய பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில், அடித்து ஆடுவதற்கு உகந்த பந்து கிடைப்பதற்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் கூட, அதற்காகக் காத்திருந்து அதைக் கையாள வேண்டும். ஆடுகளத்தைப் பொருத்த வரையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்தப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

நாளை தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் போட்டியில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதவுள்ளன. ஜூன் 4-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com