2-ம் நாளில் 21 ஓவர்கள் மட்டுமே சாத்தியமானது! இலங்கை அணி மீண்டும் அசத்தல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது...
2-ம் நாளில் 21 ஓவர்கள் மட்டுமே சாத்தியமானது! இலங்கை அணி மீண்டும் அசத்தல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மழையால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 21 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. எஞ்சிய நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 11. 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் 17 ரன்களை எடுத்தது. 

இலங்கை அணி தனது அசத்தலான பந்துவீச்சை இன்றும் தொடர்ந்தது. நேற்று ஒரு ரன்னும் கொடுக்காமல் பந்துவீசிய சுரங்கா லக்மல், 46 பந்துகளுக்குப் பிறகு ரன் கொடுத்தார். அவருடைய பந்தில் ரஹானே ஒரு பவுண்டரி அடித்து கணக்கை ஆரம்பித்தார். 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெரோமி டெய்லர் 40 பந்துகளுக்கு ரன் எதுவும் கொடுக்காமல் வீசினார். அந்தச் சாதனையை சுரங்கா லக்மல் முறியடித்தார். 

ரஹானே அந்த பவுண்டரியுடன் ஷனகா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 29 பந்துகள் தாக்குப்பிடித்த அஸ்வின் 4 ரன்களில் ஷனகா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 50 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

மறுபுறம், சமீபத்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய புஜாரா, இலங்கை அணியின் பந்துவீச்சை பிரமாதமாக எதிர்கொண்டார். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து இந்திய அணி ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். 33-வது ஓவரின்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. புஜாரா 47, சாஹா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கைத் தரப்பில் லக்மல் 3 விக்கெட்டுகளும் ஷனகா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 2-ம் நாளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாளன்று 11.5 ஓவர்கள் மட்டுமே வீசமுடிந்தது. இரண்டாம் நாளில் இதை விடவும் கூடுதலாக 9.1 ஓவர்கள் வீசி மொத்தமாக 21 ஓவர்கள் மட்டுமே வீசமுடிந்தது.

3-ம் நாளில் இதைவிடவும் அதிக ஓவர்கள் வீசுவதற்கான சாதகமான வானிலை கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் பரபரப்பான தருணங்களை அடுத்து வரும் 3 நாள்களில் எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com