கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணிக்கு நெருக்கடி தரும் இலங்கை பேட்ஸ்மேன்கள்!

தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள இலங்கை அணி தேநீர் இடைவேளையின்போது வலுவான நிலையை அடைந்துள்ளது... 
கொல்கத்தா டெஸ்ட்: இந்திய அணிக்கு நெருக்கடி தரும் இலங்கை பேட்ஸ்மேன்கள்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 172 ரன்களுக்குச் சுருண்டது. பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள இலங்கை அணி தேநீர் இடைவேளையின்போது வலுவான நிலையை அடைந்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. நேற்று, 2-வது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. முதல் நாள் பந்துவீச்சில் இலங்கையின் சுரங்கா லக்மல் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 2-வது நாளில் டாசன் சனகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார். 

2-ம் நாளிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததை அடுத்து ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 பவுண்டரிகள் உள்பட 47, ரித்திமான் சாஹா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது ஹெராத் பந்தில் பவுண்டரி அடித்து 108 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆனால் லாஹிரு காமேஜின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி 52 ரன்களுடன் வெளியேறினார் புஜாரா. இதன்பிறகு களமிறங்கிய ஜடேஜா ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். இவருக்கு இணையாக சாஹாவும் நிறைய பவுண்டரிகளை அடித்தார். இதனால் இந்தக் கூட்டணி ஒருகட்டத்தில் பத்து ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. 

ஆனால் ஒரே ஓவரில் ஜடேஜாவும் சாஹாவும் வீழ்ந்தார்கள். 52-வது ஓவரை வீசிய பெரேரா 22 ரன்களில் ஜடேஜாவையும் 29 ரன்களில் சாஹாவையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி உருவானது. ஓரளவு தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் 13 ரன்களில் வெளியேறினார். கடைசியில் முகமது சமி 24 ரன்களில் அவுட் ஆக, இந்திய அணி 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்குச் சுருண்டது. உமேஷ் யாதவ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைத் தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சனகா, லாஹிரு காமேஜ், பெரேரா ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணியைக் குறைந்த ரன்களில் சுருட்டியதால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கினார்கள் தொடக்க வீரர்களான சதீரா சமரவிக்ரமாவும் திமுத் கருணாரத்னேவும். இந்த வருடம் அதிக ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ள கருணாரத்னே, பிரமாதமாகப் பந்துவீசிய புவனேஸ்வரின் பந்துவீச்சில் 8 ரன்களில் வீழ்ந்தார். அடுத்தச் சில பந்துகளில் சமரவிக்ரமாவை 23 ரன்களில் வீழ்த்தினார் புவனேஸ்வர். இதனால் 6.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என்கிற மோசமான தொடக்கத்தை அடைந்தது இலங்கை அணி.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த திரிமானியும் ஏஞ்ஜெலோ மேத்யூஸும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் பந்துவீச்சை திறமையுடன் எதிர்கொண்டார்கள். இதனால் தேநீர் இடைவேளை வரை இவர்களை இந்திய அணியால் பிரிக்கமுடியாமல் போனது.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. திரிமானி 48 ரன்களும் மேத்யூஸ் 31 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள். எட்டு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி இன்னும் 59 ரன்கள் எடுத்தால் இந்திய அணியின் ஸ்கோரைத் தாண்டிவிடலாம். இதனால் இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com