சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணிக்கு நெருக்கடி! கருணாரத்னே, சண்டிமல் அரை சதம்!

இலங்கை அணி 67 ஓவர்களில் 160 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.
சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணிக்கு நெருக்கடி! கருணாரத்னே, சண்டிமல் அரை சதம்!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 167 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இன்று தொடங்கியுள்ளது. முன்னதாக, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டு டிரா ஆனது. இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் 2-வது போட்டியில் களமிறங்கியுள்ளன. 

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற ஷிகர் தவன், புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோருக்குப் பதிலாக முரளி விஜய், இஷாந்த் சர்மா, ரோஹித் சர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளார்கள். நாகபுரி மைதானத்தின் ஆடுகளம் முதல் இரு நாள்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டதால் தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து ஷமியும் விலகியதால் அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மாவை கோலி தேர்வு செய்துள்ளது விமரிசனங்களை வரவழைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ரஞ்சி போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இஷாந்த் சர்மா, சதீரா சமரவிக்ரமாவின் விக்கெட்டை 13 ரன்களில் வீழ்த்தினார். புஜாராவின் அற்புதமான கேட்சினால் இந்த விக்கெட் சாத்தியமானது. இதனால் இலங்கை வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார்கள். அஸ்வின் இன்று பிரமாதமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்தார். இதனால் அழுத்தத்துக்கு ஆளான லஹிரு திரிமானே 9 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் ஜடேஜா பந்துவீச்சில் திமுத் கருணாரத்னே ஸ்டம்பிங் ஆனார். ஆனால் ஜடேஜா நோ பால் வீசியதால் தப்பிப் பிழைத்தார் கருணாரத்னே. 

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. 

இதன்பிறகு சற்று வேகமாக ரன்கள் குவிக்க இலங்கை பேட்ஸ்மேன்கள் முயற்சி செய்தார்கள். மேத்யூஸ் 10 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய திமுத் கருணாரத்னே அரை சதமெடுத்த பிறகு 53 ரன்களுக்கு இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 122 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடி நிலைமையில் இருந்தது இலங்கை அணி. அதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் சண்டிமலும் நிரோஷன் டிக்வெல்லாவும் பொறுப்புடன் விளையாடி தேநீர் இடைவேளை வரை மேலும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள்.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 59 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.

அதன்பிறகு சண்டிமல் 97 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் அவர் அரை சதமெடுத்த அடுத்தப் பந்திலேயே ஜடேஜா பந்துவீச்சில் 24 ரன்களுடன் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். அடுத்தச் சில ஓவர்களில் சனகா, அஸ்வினின் அற்புதமான பந்துவீச்சில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 67 ஓவர்களில் 160 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com