ரஞ்சியில் அசத்தி வரும் இந்த பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடமுண்டா?

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் சவாலான நேரமிது...
ரஞ்சியில் அசத்தி வரும் இந்த பேட்ஸ்மேன்கள் & பந்துவீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடமுண்டா?

ரஞ்சி போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன.

குரூப் ஏ பிரிவில் கர்நாடகா, தில்லி அணிகளும் பி பிரிவில் குஜராத், கேரள அணிகளும் சி பிரிவில் மத்தியப் பிரதேசம், மும்பை அணிகளும் டி பிரிவில் விதர்பா, பெங்கால் அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. 

காலிறுதி ஆட்டங்கள் டிசம்பர் 7 அன்று தொடங்கவுள்ளன. ஜெய்ப்பூரில் குஜராத் - பெங்கால் அணிகளும் விஜயவாடாவில் தில்லி - மத்தியப் பிரதேச அணிகளும் சூரத்தில் கேரளா - விதர்பா அணிகளும் நாகபுரியில் மும்பை - கர்நாடகா அணிகளும் மோதவுள்ளன. டிசம்பர் 17 அன்று அரையிறுதி ஆட்டங்களும் டிசம்பர் 29 அன்று இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.

லீக் சுற்றுகளின் முடிவில் கீழ்க்கண்ட பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களும் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

டாப் 5 பேட்ஸ்மேன்கள்

எண்பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதங்கள் சராசரி
1.

மயங்க் அகர்வால் (கர்நாடகா)

 6 1064 5 133.00
2அன்மோல்ப்ரீத் சிங் (பஞ்சாப்) 5 753 3 125.50
3.ஹனுமா விஹாரி (ஆந்திரா) 6 752 2 94.00
4.ஃபயஸ் ஃபஸல் (விதர்பா) 6 710 4 101.42
5.சஞ்சய் ராமசாமி (விதர்பா) 6 665 3 95.00

டாப் 5 பந்துவீச்சாளர்கள்

எண்பெயர்ஆட்டங்கள்விக்கெட்டுகள்5 விக்கெட்டுகள்
1.

ஜலஜ் சக்ஸேனா (கேரளா)

 6 38 3
2.தர்மேந்த்ரசிங் ஜடேஜா (செளராஷ்டிரா) 6 34 3
3.பியூஷ் சாவ்லா (குஜராத்) 5 31 3
4.அசோக் டிண்டா (பெங்கால்) 6 30 3
5.சித்தார்த் தேசாய் (குஜராத்) 4 28 3

பேட்ஸ்மேன்களின் பட்டியலில் கர்நாடகாவின் மயங்க் அகர்வால், விதர்பாவின் ஃபயஸ் ஃபஸல் மற்றும் சஞ்சய் ராமசாமி என மூன்று பேர் தொடக்க வீரர்கள். ஏற்கெனவே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் தொடக்க வீரர்கள் அளவுக்கதிகமாக இருக்கிறார்கள். ஒருநாள் போட்டியில் நன்கு விளையாடியும் ரஹானாவுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. டெஸ்டில் விஜய், தவன், ராகுல் என மூன்று பேர் இரண்டு இடங்களுக்குப் போட்டியிடுகிறார்கள். மேலும் அதிக ரன்கள் பட்டியலில் 5 போட்டிகளில் 3 சதங்கள் உள்ளிட்ட 521 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா-வும் கவனம் ஈர்த்துள்ளார். இவரும் தொடக்க வீரர் என்பதால் இந்தியத் தேர்வுக்குழு வசம் தற்போது ஏராளமான தொடக்க வீரர்கள் உள்ளார்கள்.

இந்த ஐந்து பேரில் குறைந்த மூன்று பேட்ஸ்மேன்கள் மற்றும் பிருத்வி ஷா ஆகிய 4 பேட்ஸ்மேன்களுக்கும் இந்திய ஏ அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று நம்பலாம். 

பந்துவீச்சாளர்களில் 30 வயது ஜலஜ் சக்சேனா ஆஃப் ஸ்பின்னர். இவர் ஒரு ஆல்ரவுண்டரும் கூட. 98 முதல்தரப் போட்டிகளில் 12 சதங்களும் 28 அரை சதங்களும் எடுத்துள்ளார். ஆனால் இவருக்கு எதிராக உள்ளது வயதுதான். 30 வயதுக்கு மேல் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தர்மேந்த்ரசிங் ஜடேஜா , 27 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளர். அடுத்த இடங்களில் உள்ள 28 வயது பியூஷ் சாவ்லாவும் 33 வயது டிண்டாவும் இந்தியாவுக்கு ஏற்கெனவே விளையாடியவர்கள். மீண்டும் திறமையை வெளிப்படுத்தியதால் தேர்வுக்குழுவுக்குத் தங்கள் பெயர்களை நினைவூட்டியுள்ளார்கள்.

மற்றொரு இடக்கை சுழற்பந்து வீச்சாளரான குஜராத்தைச் சேர்ந்த சித்தார்த் தேசாய்க்கு 17 வயதுதான். 4 போட்டிகளிலேயே 28 விக்கெட்டுகள் எடுத்துள்ளதால் நிச்சயம் இவர்மீது தேர்வுக்குழு நம்பிக்கை வைக்கும். இவரைத் தொடர்ந்து கணிகாணிக்கும்.

அஸ்வின், ஜடேஜா மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் சுழற்பந்துவீச்சாளர்களைத் தவிர ஷபாஸ் நதீம், கரண் சர்மா ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாகச் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்கள். இந்திய ஏ அணியில் இடம்பெற்று முத்திரை பதித்துள்ளார்கள். இவர்களிருவரையும் இந்திய அணியில் சேர்க்கமுடியாமல் தேர்வுக்குழு திணறுகிறது. இந்த நிலையில் மேலும் சுழற்பந்துவீச்சாளர்கள் சிலரும் வாய்ப்பு கோருவது நிச்சயம் தலைவலியை உண்டாக்கும். ஏற்கெனவே இந்திய அணிக்காக விளையாடுகிற சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவருவதால் தற்போதைக்கு இந்தச் சிக்கலிலிருந்து விடுபடலாம்.  

இந்திய அணி - டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறது. இதனால் தற்போது விளையாடி வரும் வீரர்களை எக்காரணம் கொண்டும் வெளியே அனுப்பமுடியாத சூழ்நிலை. ரஹானே போன்ற வீரர்களுக்கே ஒருநாள் அணியில் இடம் கிடைப்பதில்லை. இதுதவிர கிடைக்கிற வாய்ப்புகளில் இந்திய அணி வீரராகச் சிறப்பாக விளையாட்டுபவர்களையும் மறக்கமுடியாது. இவர்கள் தவிர, ரஞ்சி போட்டியில் திறமையை வெளிப்படுத்தியவர்கள் என இந்தியாவில் கிரிக்கெட் திறமைகளுக்குப் பஞ்சமே இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு வீரரை அணியிலிருந்து நீக்கினால் அந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள குறைந்தது மூன்று வீரர்களாவது தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில் யாருக்கு வாய்ப்பு தருவது? யாரைத் தவிர்ப்பது?

உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் தேர்வுக்குழுவுக்கும் சவாலான நேரமிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com