அர்ஜுனா, கேல்ரத்னா, துரோணாச்சார்யா விருதுக்கு கிரிக்கெட், டென்னிஸ், குத்துச்சண்டை வீரர்கள் பெயர்கள் பரிந்துரை

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்காக வழங்கப்படும் அர்ஜுனா, கேல்ரத்னா, துரோணாச்சார்யா விருதுகளுக்கு
அர்ஜுனா, கேல்ரத்னா, துரோணாச்சார்யா விருதுக்கு கிரிக்கெட், டென்னிஸ், குத்துச்சண்டை வீரர்கள் பெயர்கள் பரிந்துரை

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்காக வழங்கப்படும் அர்ஜுனா, கேல்ரத்னா, துரோணாச்சார்யா விருதுகளுக்கு கிரிக்கெட், குத்துச்சண்டை, டென்னிஸ் வீரர்கள், பயிற்சியாளர்கள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 கெளரவமிக்க துரோணாச்சார்யா விருதுக்கு ராகுல் திராவிட் பெயரும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வீரர் சுனில் கவாஸ்கர் பெயரும், ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு கேப்டன் விராட் கோலி பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாக குழுவின் நிர்வாகி (சிஓஏ) வினோத் ராய் கூறியதாவது: பல்வேறு பிரிவுகளுக்கு விருதுகளுக்காக பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. நிகழாண்டு தொடக்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வெல்ல திராவிட் உதவினார். கடந்த 2016-இலும் இப்போட்டியில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இந்திய ஏ அணிக்கும் அவர் பயிற்சி அளித்துள்ளார்.
 ராஜீவ் கேல்ரத்னா விருதுக்கு கோலி பெயரை இரண்டாவது முறையாக பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. கடந்த 2016-இல் கோலி பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகருக்கு கேல்ரத்னா விருதுகள் தரப்பட்டன. கிரிக்கெட் விளையாட்டுக்கு கவாஸ்கர் ஆற்றிய சாதனைகள், செயல்பாடுகளுக்காக தயான்சந்த் வாழ்நாள் விருதுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் ராய்.
 டென்னிஸ்
 டென்னிஸ் விளையாட்டில் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடி வரும் யுகி பாம்ப்ரி, இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ரோஹன் போபண்ணா ஆகியோரது பெயர்கள் அர்ஜுனா விருதுக்காக அகில இந்திய டென்னிஸ் சங்கம் பரிந்துரைத்துள்ளது. யுகி பாம்ப்ரி சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 83-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
 ரோஹன் போபண்ணா கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இதை சங்க பொதுச் செயலாளர் ஹிரோமணி சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
 குத்துச்சண்டை
 அர்ஜுனா விருதுக்காக குத்துச்சண்டை வீரர் கவுரப் பிதுரி, சோனியா லேதர் ஆகியோர் பெயர்களும், மகளிர் அணி தலைமைப் பயிற்சியாளர் ஷிவ் சிங், துணை பயிற்சியாளர்கள் பாஸ்கர் பட், சந்தியா குருங் ஆகியோர் பெயர்கள் துரோணாச்சார்யா விருதுக்கும் இந்திய குத்துச் சண்டை சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது. பிதுரி உலக சாம்பியன் போட்டியில் வெண்கலமும், சோனியா லேதர் ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
 துப்பாக்கி சுடுதல்
 துப்பாக்கி சுடுதலில் ஷிரேயாசி சிங், அங்குர் மிட்டல், ஷாசர் ரிஸ்வி, பூஜா கட்கர் ஆகியோர் பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com