இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை காலமானார்.
கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார். இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வடேகர், 2,113 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, 73 ரன்கள் எடுத்தார்.
இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் இந்த மகத்தான வெற்றிக்கு அணியின் ஒற்றுமையும் முக்கியக் காரணம் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் வடேகர். அதுகுறித்து அவர் கூறியதாவது:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது இதர நாடுகளில் கேப்டனாக இருப்பதை விடவும் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது மிகக் கடினம். ஏனெனில் இந்திய அணியில் பல்வேறு பின்னணிகள், கலாசாரங்கள், மொழிகளைக் கொண்டவர்கள் இருப்பார்கள். ஒரே மொழி பேசும் வீரர்கள் எங்குச் சென்றாலும் ஒன்றாகச் செல்வார்கள். இதனால் அணியில் தானாக ஒரு பிரிவு ஏற்பட்டுவிடும்.
ஓர் அணியாக அனைவரையும் இணைப்பது மிகக்கடினம். ஏனெனில் ஒரு வீரர் பேசுவது இன்னொரு வீரருக்குப் புரியாது. எனவே அணியினரை ஒற்றுமையாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனவே நாங்கள் ஒருநடைமுறையை உருவாக்கினோம். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் அனைவரும் விடுதியில் உள்ள பாரில் சந்திப்பது என முடிவெடுத்தோம். நீங்கள் பீர் அருந்துவீர்களோ லெமன் ஜூஸ் குடிப்பீர்களோ தெரியாது. ஆனால் அற்புதமான சூழல் உள்ள பாரில் நீங்கள் நன்குப் பேசிப் பழகிக்கொள்ளமுடியும். அந்தச் சமயத்தில் ஒருவர், வாருங்கள் எல்லோரும் இட்லி தோசை சாப்பிடலாம் என்பார். தென் இந்தியாவைச் சாராதவரும் அச்சமயத்தில், ஆமாம். ஒரு மாறுதலுக்கு இதை இன்று சாப்பிடலாம் என்பார். இது அணியின் ஒற்றுமைக்கு மிகவும் உதவும் என்றார்.
வடேகரின் மறைவுக்கு ஐசிசி, பிசிசிஐ, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வட்டாரத்திலுள்ள பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.