இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன் விண்ணப்பம்: ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேரி கிறிஸ்டனை மறக்கவே முடியாது...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன் விண்ணப்பம்: ரசிகர்கள் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கேரி கிறிஸ்டனை மறக்கவே முடியாது. நெருக்கடியான காலகட்டத்தில் 2007-ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றதோடு 2011 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கியக் காரணமாகவும் இருந்தவர். அவர் பணிக்காலத்தில் இந்திய டெஸ்ட் அணி நெ. 1 இடத்தையும் அடைந்தது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 

எப்படி ஆடவர் அணியின் பிரச்னையைத் தீர்க்க வந்தாரோ அதுபோல மகளிர் அணியில் தற்போது நிலவும் சிக்கல்களையும் கிறிஸ்டன் தீர்ப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. ஆம். இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிறிஸ்டன் விண்ணபித்துள்ளார். இதையடுத்து அவரைத் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இப்பதவிக்கு அதுல் படாடே, டேவிட் ஜான்சன், ராகேஷ் சர்மா, மனோஜ் பிரபாகர், ஓவாயிஸ் ஷா, கிப்ஸ், டிமிட்ரி மெஸ்கரன்ஹெஸ், தார்ன்லி, கர்கி பானர்ஜி, ஜெய்சிம்ஹா, ரமேஷ் பவார், காலின் சில்லர், டேவ் வாட்மோர் போன்றோர் விண்ணப்பித்துள்ள நிலையில் 51 வயது கேரி கிறிஸ்டனுன் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜை சேர்க்கவில்லை. இதற்கு பயிற்சியாளர் ரமேஷ் பவார், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் காரணம் என மிதாலி புகார் கூறி பிசிசிஐக்கு கடிதம் எழுதினார். தொடக்க வீரராகக் களமிறக்காவிட்டால் போட்டியில் இருந்து வெளியேறுவேன் என மிதாலி மிரட்டியதாக பவார் பதிலுக்கு புகார் தெரிவித்திருந்தார். இதனால் இந்திய மகளிர் அணியில் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நவம்பர் 30-ம் தேதியோடு பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவருக்கு நீட்டிப்பு தரப்படவில்லை. புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பவாருக்கு 2021 வரை நீட்டிப்பு தர வேண்டும் என டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெüர், ஸ்மிருதி மந்தானா ஆகியோர் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளனர். பவாரின் கீழ் அணி சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. தற்போது மாற்றினால் அணியின் செயல்பாடு பாதிக்கும். மிதாலி நீக்கத்துக்கு பவார் மட்டுமே காரணமில்லை. நான், ஸ்மிருதி, தேர்வாளர் சுதா ஷா ஆகியோர் சேர்ந்து வெற்றிக்கு வழிவகுத்த அணியே தொடர முடிவு செய்தோம். இதில் தனிப்பட்ட விருப்பம் ஏதுமில்லை. அணி நலனே மேலோங்கி இருந்தது. மிதாலி-பவார் பிரச்னையை உட்கார்ந்து பேசி ஒரு குடும்பமாக தீர்வு காண வேண்டும். இதனால் ஒட்டுமொத்த அணிக்கும் சரியான விழிப்புணர்வும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படும் என கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரமேஷ் பவார் விண்ணப்பித்துள்ளார். 

புதிய பயிற்சியாளர் தேர்வு டிச. 20-ஆம் தேதி மும்பை தலைமையகத்தில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com