36 வயதில் நெ.1: ரோஜர் ஃபெடரரின் புதிய சாதனை!

இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆன்ட்ரே அகசி 2003-ஆம் ஆண்டு தனது 33-வது வயதில் உலகின் முதல்நிலை வீரராக இருந்தார்...
36 வயதில் நெ.1: ரோஜர் ஃபெடரரின் புதிய சாதனை!

நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதியில் நுழைந்துள்ளார். இதையடுத்து ஏடிபி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ஏடிபி வரலாற்றில் தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான வீரர் (36) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற ஃபெடரர், ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாலே, நடாலை பின்னுக்குத்தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடிப்பார் என்கிற நிலைமை இருந்தது. இந்நிலையில் காலிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸை 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு ரோட்டர்டாம் ஓபனில் பங்கேற்றிருந்த ஃபெடரர், முன்பு 2012, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தப் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார்.

அரையிறுதிக்கு நுழைந்ததையடுத்து தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான வீரர் என்கிற சாதனையை அடைந்துள்ளார் ஃபெடரர்.

இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆன்ட்ரே அகசி 2003-ஆம் ஆண்டு தனது 33-வது வயதில் உலகின் முதல்நிலை வீரராக இருந்தார். அவருடைய சாதனையை ஃபெடரர் முறியடித்துள்ளார்.

முதலிடத்தில் ரோஜர் ஃபெடரர் #1 (302 வாரங்கள்!)

பிப்ரவரி 2004 - ஆகஸ்ட் 2008 - 237 வாரங்கள்
ஜூலை 2009 - ஜூன் 2010 -  48 வாரங்கள்
ஜூலை 2012 - நவம்பர் 2012 -  17 வாரங்கள்
பிப்ரவரி 2018

தரவரிசையில் முதலிடம் பிடித்த அதிக வயதான வீரர்கள் #1

36 ரோஜர் ஃபெடரர் பிப்ரவரி 2018
33 ஆன்ட்ரே அகசி செப்டம்பர் 2003
31 ரஃபேல் நடால் பிப்ரவரி 2018
30 ஜிம்மி கான்னர்ஸ் ஜூலை 1983 

சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது, ஃபெடரர் வென்ற 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். 20 பட்டங்களுடன் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர்களின் வரிசையில் நான்காம் இடம் வகிக்கிறார். இதன் அடிப்படையில் ஆடவர் வரிசையில் ஃபெடரரே முதலிடம் வகிக்கிறார்.

அதிக ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

மார்கரெட் கோர்ட் - 24

செரீனா வில்லியம்ஸ் - 23

கிராஃப் - 22

ஃபெடரர் - 20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com