உலகக் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது இடத்துக்கான ஆட்டம் இங்கிலாந்து-பெல்ஜிய அணிகள் இடையே செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸிடம் 1-0 என பெல்ஜியமும், குரோஷியாவிடம் 2-1 என இங்கிலாந்தும் தோல்வியுற்றன.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் சுற்று ஆட்டத்திலேயே பெல்ஜியத்திடம் 1-0 என இங்கிலாந்து ஏற்கெனவே தோல்வி அடைந்திருந்தது. ஓரே உலகக் கோப்பையில் இரு அணிகள் மீண்டும் மோதுவது இரண்டாவது தடவையாகும். கடந்த 1986-இல் பெல்ஜிய அணி நான்காம் இடம் பெற்றிருந்தது. இங்கிலாந்து 1966இல் சாம்பியன் பட்டம் வென்றது.
அரையிறுதி தோல்வியில் இருந்து மீண்டு மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் முனைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.