ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் - ரஹானே

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் ஸ்மித் பதவி விலகல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் - ரஹானே

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஸ்மித் நியமிக்கப்பட்டார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலை நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அப்பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். இதையடுத்து கேப்டன் பதவி இந்திய வீரர் ரஹானேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு வீரராக ஐபிஎல் போட்டியில் ஸ்மித் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

ஸ்டீவ் ஸ்மித் ரூ. 12.50 கோடிக்கும் ரஹானே ரூ. 4 கோடிக்கும் ராஜஸ்தான் அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

ராஜஸ்தான் அணிக்கு அதிக விலைக்குத் தேர்வான வீரர்கள்

ஸ்டீவ் ஸ்மித் - ரூ. 12.50 கோடி
பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
உனாட்கட் - ரூ. 11.50 கோடி
சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி
ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 7.20 கோடி
கெளதம் - ரூ. 6.20 கோடி
ரஹானே, ஷார்ட், பட்லர் - ரூ. 4 கோடி
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி

தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இதில் 3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் மஞ்சள் நிற பொருள் ஒன்றை வைத்து பந்தின் தன்மையை மாற்ற முயன்றார். 3-ம் நாள் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பந்து சேதப்படுத்தப்பட்டதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒப்புக் கொண்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து அணியின் முக்கிய வீரர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. கேப்டன் ஸ்மித்துக்கு எதிராக பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அந்த அணிக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களின் செயல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கும் வகையில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் அதிருப்தி தெரிவித்தார். 

ஸ்மித்தைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆஸ்திரேலிய அரசு தரப்பில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு ஸ்மித் மற்றும் வார்னருக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரும் பதவி விலகினர்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாட இயலாது. மேலும், அவருக்கான போட்டி ஊதியம் 100 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனிடையே, பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்டுக்கு போட்டி ஊதியத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேன்கிராஃப்டின் தரவரிசை புள்ளிகளில் 3 குறைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com