அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் இன்று தொடக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வியாழக்கிழமை
டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் கோலி- ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.
டெஸ்ட் தொடருக்கான கோப்பையுடன் இந்திய கேப்டன் கோலி- ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்.


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
கடந்த 70 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா, அங்கு ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை. எனவே, இந்த டெஸ்ட் தொடர் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதுவரை சுமார் 11 முறை ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அதிகபட்சமாக இரு முறை டெஸ்ட் தொடரை டிரா செய்துள்ளது. சுனில் காவஸ்கர் (1980-81), செளரவ் கங்குலி (2003-04) ஆகிய இரு கேப்டன்களின் தலைமையில் அந்தத் தொடர்கள் டிரா செய்யப்பட்டன.
ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அதில் 5-இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்பட்டுள்ள கோலி, இந்தத் தொடர் வெற்றியின் மூலமாக தன்னை சிறந்த கேப்டனாக நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஒரு ஆக்ரோஷமான போட்டிக்காக தயாராகியுள்ள இந்திய அணி, 5 பந்துவீச்சாளர்கள் வியூகத்திலிருந்து சற்று மாறியுள்ளதாகத் தெரிகிறது. 12 வீரர்களில் 4 பவுலர்களே உள்ளனர். மறுபுறம், ரோஹித் சர்மா மற்றும் ஹனுமா விஹாரி சேர்த்துகொள்ளப்பட்டுள்ளனர். 
காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இல்லாத இடத்தை ரோஹித் சர்மா நிரப்புகிறார். இளம் வீரரான ஹனுமா விஹாரியும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்குவார் என எதிர்பார்க்கலாம். அணியைப் பொருத்த வரையில் இங்கிலாந்து தொடரின்போது இரு விவகாரங்கள் முக்கியப் பிரச்னையாக இருந்தது.
முதலாவதாக, கோலியோடு சேர்த்து அதிக ரன்கள் விளாசக் கூடிய வகையில் இந்திய வீரர்களின் செயல்பாடு இருக்கவில்லை. புஜாரா, முரளி விஜய், பாண்டியா ஆகியோர் முயற்சித்தாலும், அது அணியின் ஸ்கோருக்கு போதிய பலனளிக்கவில்லை. 
அதேபோல், தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கும் விவகாரமும் அணிக்கு தகுந்த தொடக்கத்தை அளிப்பதாக இருக்கவில்லை. இந்தத் தொடரில் அந்தப் பிரச்னைகளை இந்தியா சரியாகக் கையாளும் பட்சத்தில், அது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். மிடில் ஆர்டர் வீரர்களும் சற்று பொறுப்புடன் ஆட வேண்டியுள்ளது.
காயம் காரணமாக பிருத்வி ஷா வெளியேறியதால், லோகேஷ் ராகுல்-முரளி விஜய் கூட்டணி இன்னிங்ஸை தொடங்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சைப் பொருத்த வரையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா வேகப்பந்துவீச்சிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடிக்க உள்ளனர்.

அணிகள் விவரம்
இந்தியா: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி.
ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், பேட்ரிக் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட்.

பாக்ஸிங் டே டெஸ்டில் பிருத்வி ஷா பங்கேற்பு?
கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் இந்திய வீரர் பிருத்வி ஷா, கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்டில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
கடந்த வாரம் கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இடம்பெற்றிருந்த பிருத்வி ஷா, கேட்ச் ஒன்றை பிடிக்க முற்பட்டபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்றும் வரும் அவர் அணிக்கு திரும்புவது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புதன்கிழமை கூறுகையில், பிருத்வி ஷா காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருகிறார். 
தற்போது நடக்கத் தொடங்கியுள்ள அவர், இந்த வார இறுதிக்குள்ளாக ஓடும் அளவுக்கு மீளும் பட்சத்தில், பெர்த்தில் நடைபெறும் 2-ஆவது டெஸ்டில் அவரை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்றார்.

பணிச்சுமையை பளுவாக கருதக் கூடாது: விராட் கோலி
வேகப்பந்து வீசக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் (ஹார்திக் பாண்டியா) இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். இத்தகைய சூழ்நிலை எதிரணிக்கு சாதகமானதாகவே இருக்கும். எனவே, பாண்டியாவின் பணிச்சுமையை இஷாந்த் சர்மா தலைமையிலான வேகப்பந்துவீச்சாளர்கள் தங்களுக்குள்ளாக பகிர்ந்துகொள்ள வேண்டும். 
அவ்வாறு கிடைக்கும் எக்ஸ்ட்ரா ஓவர்களை அவர்கள் பளுவாக நினைக்கக் கூடாது. அதேபோல் பவுன்சருக்கு சாதகமானதாக இருக்கும் ஆடுகளத்தையும் அவர்கள் கடினமானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
ஒரு ஆட்டத்தின்போது எதிரணி வீரர்களுடன் ஆக்ரோஷமான மோதல் போக்கு எழுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், அது எல்லையை தாண்டாத வகையில் இருக்கும் என்று இரு அணியினரும் நம்புகிறோம். இது ஒரு சர்வதேச போட்டி. எனவே, வீரர்களை உணர்வுகள் இன்றி விளையாடச் செய்வது இயலாத காரியம் என்று கோலி கூறியுள்ளார்.

மதிப்பை மீட்க வெற்றி அவசியம்: டிம் பெய்ன்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் சரிந்துள்ள ஆஸ்திரேலிய அணியின் மீதான மதிப்பை இந்தத் தொடர் வெற்றியின் மூலமாக மீட்டெடுக்க விரும்புகிறோம். இந்தியாவுக்கு எதிரான வெற்றியோ, ஆஸ்திரேலிய அணியின் மதிப்பை மீட்டெடுப்பதோ, இரண்டுமே எளிதானது அல்ல.
முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்குடன் பேசும்போது, இதுவரையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்கள் குறித்து விவாதித்தேன். உண்மையில், டெஸ்ட் கேப்டன் பொறுப்பானது, கையாள சற்று கடினமான ஒன்றுதான். எனினும் இந்த கெளரவமிக்க பொறுப்பை மிக இயல்பாக கையாள விரும்புகிறேன்.
முதல் டெஸ்டில் 4 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவது போதிய பலனளிக்கும் என்று நம்புகிறேன் என்று டிம் பெய்ன் கூறினார்.


போட்டி நேரம்: காலை 5.30
நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com