அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாற்றம் 250/9

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸி. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாற்றம் 250/9

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 250 ரன்களுடந் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

* புஜாராவின் அபார சதத்தால் தப்பியது 
* ஆஸ்திரேலியா சீரான பந்துவீச்சு
* கேப்டன் கோலி ஏமாற்றம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 250 ரன்களுடந் தடுமாறிக் கொண்டிருக்கிறது. புஜாரா அபாரமாக ஆடி 123 ரன்களுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார். 
கேப்டன் விராட் கோலி உள்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்று ஆடுவதற்காக ஆஸி.யில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது.டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், அடிலெய்ட் நகரில் முதல் டெஸ்ட் ஆட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்குக்கு சாதகமாக பிட்ச் இருந்த நிலையில் இந்திய சார்பில் லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆரம்பமே அதிர்ச்சி
ஹேசல்வுட் பந்துவீச்சில் 2 ரன்களுடன் ராகுல் வெளியேறினார். முரளி விஜய் 11 ரன்களுடன் ஸ்டார்க் பந்துவீச்சில் பெய்னிடம் கேட்ச் தந்து வெளியேறினார். அவருக்கு பின் வந்த புஜாரா ஒருமுனையில் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்து வந்தார். 
3 ரன்களில் கோலி அவுட்
பேட்டிங்கின் தூணாக விளங்கி வரும் கேப்டன் கோலி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்கம்மின்ஸ் பந்துவீச்சில் கவஜாவிடம் கேட்ச் தந்து 3 ரன்களோடு வெளியேறினார். துணைக் கேப்டன் ரஹானேவும் 31 பந்துகளில் 13 ரன்களை எடுத்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் 127/6 என தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய அணி புஜாராவால் மீண்டது.
ரோஹித்-பந்த் அதிரடி
புஜாராவுடன்- ரோஹித் சர்மா இணைந்து 45 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 61 பந்துகளில் 37 ரன்களை விளாசி லயான் நாதன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷப் பந்த்-புஜாராவுடன் இணைந்து 41 ரன்களை சேர்த்தார். ஆனால் அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 25 ரன்களை விளாசிய பந்த், லயான் பந்தில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளையின் போது 184/6 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. ஓரளவு ஆடி ரன்களை சேர்த்த அஸ்வின் 76 பந்துகளில் 25 ரன்களை குவித்து பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். இந்திய அணி 200 ரன்கள் எடுத்த போது, ஆஸி. அணி இரண்டாவது புதிய பந்தை எடுத்தது. இதன் பலனாக இஷாந்த் சர்மா 4 ரன்களோடு, ஸ்டார்க் பந்தில் போல்டானார். 
புஜாரா 16-வது டெஸ்ட் சதம், 5000 ரன்கள்:
இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை நிலைநிறுத்திய புஜாரா அபாராமாக சதமடித்தார். புஜாரா தனது 16-ஆவது டெஸ்ட் சதத்தை விளாசினார். ஆஸி. அணிக்கு எதிராக அடித்த 3-ஆவது சதமாகும். மேலும் ஆஸி. மண்ணில் அவர் அடித்த முதல் சதமாகும். இதன் ஒரு பகுதியாக 5000 டெஸ்ட் ரன்களை வேகமாக கடந்த 5-ஆவது இந்தியர் என்ற பெயரையும் புஜாரா பெற்றார். ராகுல் திராவிட்டும் 108 இன்னிங்ஸ்களில் 5000 ரன்களை கடந்த சாதனையை புஜாரா சமன் செய்தார்.
புஜாரா ரன் அவுட் 123
2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 246 பந்துகளில் 123 ரன்கள் விளாசி, அணியின் ஸ்கோரை உயர்த்த வழி செய்த புஜாரா, பேட் கம்மின்ஸால் ரன் அவுட் செய்யப்பட்டார். முதல் நாள் ஆட்ட முடிவில் 87.5 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து இந்தியா 250 ரன்களை சேர்த்திருந்தது.
சமி 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். 
முன் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை
முன் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவில்லை. அவர்கள் இன்னும் சிறப்பாக ஆடி இருக்கலாம். முதல் இரு வேளைகளில் ஆஸி. பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பந்துகளை கணித்து ரன்களை எடுத்தேன். இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்வோம். முதல் தர மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் எனது அனுபவம் தற்போது கைகொடுத்தது. பிட்ச் பேட்டிங் செய்ய சரியாக ஒத்துழைக்கவில்லை. ஷாட்களை அடிக்க நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இரு வேளைகள் ஆடியதால் பந்து பவுன்ஸ் மற்றும் வேகத்தை அறிந்து ஆடினேன். இதுபோன்ற சூழலுக்கு 250 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். பிட்சில் பந்து நன்றாக திரும்பியது. சிக்ஸர் அடிப்பதற்கும் நான் தனியாக பயிற்சி பெற்றேன் என்றார்.
ஆஸி. சீரான பந்துவீச்சு
ஆஸி. அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சாய்த்தனர். மிச்செல் ஸ்டார்க் 2-63, ஜோஷ் ஹேஸல்வுட் 2-52, பேட் கம்மின்ஸ் 2-49, நாதன் லயான் 2-83 விக்கெட்டை சாய்த்தனர்.
கவஜா அற்புத கேட்ச்
பேட்கம்மின்ஸ் பந்துவீச்சில் கோலி ஸ்லிப்பில் பந்தை திருப்பிய போது, ஆஸி. வீரர் உஸ்மான் கவஜா அற்புதமாக தனது ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். 
4-ஆவது முறையாக ரோஹித்தை அவுட்டாக்கிய லயான்
இந்தியாவின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா, ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் லயான் நாதனிடம் தொடர்ந்து அவுட்டாகும் வழக்கம் இந்த டெஸ்டிலும் தொடர்ந்தது. லயான் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்ற பவுண்டரி எல்லையில் மார்கஸ் ஹாரிஸிடம் கேட்ச் தந்து வெளியேறினார். முந்தைய 2014-15 தொடரிலும் லயான் பந்துவீச்சில் ரோஹித் தொடர்ந்து அவுட்டானார். தற்போது 4-ஆவது முறையாக லயான் பந்தில் வெளியேறினார் ரோஹித். தொடர்ந்து டெஸ்ட் ஆட்டத்தில் 5-இன்னிங்ஸில் அரை சதம் கூட அடிக்காமல் ரோஹித் வெளியேறியுள்ளார்.
எங்கள் அணியின் பெளலிங் திருப்தியாக இருந்தது. 127/6 என ஒரு கட்டத்தில் இந்தியா திணறியது. ஆனால் புஜாராவின் ஆட்டத்தால் நிலைமை மாறியது. முதலில் சிறப்பாக பந்து வீசினோம். ஆனால் இறுதியில் சிறிது தவறு நேர்ந்துள்ளது. புஜாரா எந்த அழுத்தத்தையும் எதிர்கொண்டு நீண்ட நேரம் ஆடினார். தற்போதைய நிலையில் பிட்சை கணிக்க முடியாது. கவஜா அருமையாக பீல்டிங் செய்தார். இந்தியாவை எதிர்கொள்ள நாங்கள் சிறப்பாக தயாராகி உள்ளோம். 
-ஆஸி பெளலர் ஸ்டார்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com