ஆஷஸ் மட்டுமல்ல ஹாக்கியிலும் ஆதிக்கம்: உலகக்கோப்பையில் வெண்கலம் வென்றது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஹாக்கி வோர்ல்ட் கப் 2018-ஹோஸ்ட் பார்ட்னர்
புகைப்படம்: டிவிட்டர்/ஹாக்கி வோர்ல்ட் கப் 2018-ஹோஸ்ட் பார்ட்னர்


உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று வெண்கலப் பதக்கத்துனான போட்டி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. முதலில் நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. 

போட்டி தொடங்கிய 8-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் கோலை அடித்து ஆதிக்கத்தை தொடங்கியது. தொடர்ந்து 9-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இதனால், முதல் கால்பகுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

2-ஆவது கால் பகுதி ஆட்டத்தில் 19-ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி 3-ஆவது கோல் அடித்தது. இதனால், இங்கிலாந்து கடுமையான நெருக்கடிக்குள்ளானது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. 

அடுத்தடுத்த நிமிடங்களில் 3 கோல்:

2-ஆவது பாதி ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 32-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், 34-ஆவது நிமிடங்களில் 2 கோல்களும் அடித்து 6 கோல்கள் என கோல் மழை பொழிந்தது. 

6 கோல்கள் பின்தங்கியிருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி வாய்ப்பை இழக்கத் தொடங்கியது. இருப்பினும், அந்த அணி 44-ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து ஆறுதல் அடைந்தது. இதனால், 3-ஆவது கால்பகுதி ஆட்டநேர முடிவில் 6-1 என்ற நிலையில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியிருந்தது. 

இதைத்தொடர்ந்து, கடைசி கால்பகுதி ஆட்டம் தொடங்கியது. இதன் தொடக்கத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இருப்பினும், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணி போட்டியின் 57 மற்றும் 60-ஆவது நிமிடத்தில் தலா 1 கோல் அடித்து கோல் எண்ணிக்கையை மேலும் நீட்டித்தது. 

இதையடுத்து, போட்டியின் முழு நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8-1 என்ற கோல் கணக்கில் அதிரடியான வெற்றியை பெற்று உலகக்கோப்பையின் வெண்கலப் பதக்கத்தை வென்றது.     

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி 3-ஆவது இடத்தை பிடிப்பது இது 5-ஆவது முறையாகும். 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு 3-ஆவது இடத்தை பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com