பெர்த் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 283

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 105.5 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டமிழந்தது.
பெர்த் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 283

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 105.5 ஓவர்களில் 283 ரன்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது ஆஸ்திரேலியா. ஞாயிற்றுக்கிழமை முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ள அந்த அணி, இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட் செய்தது. முதல் இன்னிங்ஸில் 108.3 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அசத்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 2-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை கேப்டன் கோலி 82, ரஹானே 51 ரன்களுடன் தொடங்கினர்.
இதில் ரஹானே அதே ரன்களுடன் விடை பெற்றார். அவர் நாதன் லயன் வீசிய 70-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி-ரஹானே ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது.
தொடர்ந்து ஹனுமா விஹாரி களம் காண, 80-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது இந்தியா. விராட் கோலி சதம் கடக்க, மறுமுனையில் ஹனுமா விஹாரி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் களத்துக்கு வர, 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 123 ரன்களுக்கு வீழ்ந்தார் கோலி.
அவர் பேட்ரிக் கம்மின்ஸ் வீசிய 93-ஆவது ஓவரில் ஹேண்ட்ஸ்காம்பிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஆடியவர்களில் ரிஷப் பந்த் மட்டும் 36 ரன்கள் சேர்க்க, ஷமி டக் அவுட்டாகினார். இஷாந்த் சர்மா ஒரு ரன்னில் வெளியேற, கடைசி விக்கெட்டாக பும்ரா 4 ரன்களுக்கு வீழ்ந்தார். உமேஷ் அதே ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் 5, ஸ்டார்க், ஹேஸில்வுட் தலா 2, கம்மின்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா-132/4: இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
உஸ்மான் கவாஜா 41 ரன்களுடன் நிதானமாக ஆடிவர, கேப்டன் டிம் பெய்ன் 8 ரன்களுடன் துணை நிற்கிறார். முன்னதாக, மார்கஸ் ஹாரிஸ் 20, ஷான் மார்ஷ் 5, ஹேண்ட்ஸ்காம்ப் 13, டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆரோன் ஃபிஞ்ச் 25 ரன்களுக்கு "ரிடையர்டு ஹர்ட்' ஆனார்.
இந்திய தரப்பில் முகமது ஷமி 2, இஷாந்த், பும்ரா தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

கோலி சாதனை சதம்

3-ஆம் நாள் ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இது ஆஸ்திரேலிய மண்ணில் அவரது 6-ஆவது சதமாகும்.
அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 25-ஆவது சதம் (127 இன்னிங்ஸ்) விளாசிய 2-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 68 இன்னிங்ஸ்களில் 25 டெஸ்ட் சதம் விளாசியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.
அதேபோல், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் 6 டெஸ்ட் சதம் கண்ட ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் எட்டியுள்ளார் கோலி. இது தவிர்த்து, பெர்த்  நகரில் இந்த ஆண்டு திறக்கப்பட்ட புதிய மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் சதம் கண்ட வீரர் என்ற பெருமையையும் கோலி எட்டியுள்ளார்.
மேலும், கேலண்டர் ஆண்டில் அந்நிய மண்ணில் 1000 டெஸ்ட் ரன்களை கடந்தவர்கள் வரிசையில் கோலி 11-ஆவது வீரராக இணைந்துள்ளார். அதுவே இந்திய வீரர்களாகக் கொண்டால், ராகுல் திராவிட், மொஹிந்தர் அமர்நாத்துக்குப் பிறகு 3-ஆவது 
வீரராக இணைந்துள்ளார். இந்த சாதனையை எட்டிய முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள கோலி, சர்வதேச கேப்டன்கள் வரிசையில் 3-ஆவதாக இணைந்துள்ளார்.

சர்ச்சைக்குள்ளான கோலியின் விக்கெட்

3-ஆம் நாள் ஆட்டத்தில் கோலி ஆட்டமிழந்த கேட்ச் விவாதப் பொருளாக மாறியது. 93-ஆவது ஓவரில் பேட்ரிக் கம்மின்ஸ் வீசிய பந்தை விராட் கோலி அடிக்க, செகண்ட் ஸ்லிப்பில் நின்ற பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் அந்தப் பந்தை பாய்ந்து பிடித்தார்.
அது விக்கெட் ஆனதாக ஹேண்ட்ஸ்காம்ப் கொண்டாட, பந்து தரையில் பட்டதாக கோலி, மறுமுனையில் நின்ற ரிஷப் பந்திடம் கூறினார். 
அந்த விக்கெட்டில் சந்தேகம் எழுந்ததால், கள நடுவர்கள் 3-ஆவது நடுவரிடம் பரிந்துரை கோரினர். தொலைக்காட்சி பதிவுகளின்படி, கோலி அடித்த பந்தை ஹேண்ட்ஸ்காம்ப் பிடித்தபோது பந்து தரையில் பட்டதாகத் தெரிந்தது. எனினும், அதை உறுதி செய்ய போதிய விடியோ பதிவுகள் இல்லாததால், 3-ஆவது நடுவர் அதை "அவுட்' என அறிவிக்க, கள நடுவர்களும் கோலி அவுட் அளித்தனர். 
இதனால் அதிருப்தி அடைந்த கோலி, அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார்.


சுருக்கமான ஸ்கோர்

(3-ஆம் நாள் முடிவில்...)

முதல் இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

108.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 326
ஹாரிஸ்-70, டிராவிஸ்-58, ஃபிஞ்ச்-50
பந்துவீச்சு: இஷாந்த்-4/41, பும்ரா-2/53, விஹாரி-2/53

இந்தியா

105.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 283
கோலி-123, ரஹானே-51, ரிஷப்-36

பந்துவீச்சு: 

லயன்-5/67, ஸ்டார்க்-2/42, ஹேஸில்வுட்-1/50
2-ஆவது இன்னிங்ஸ்

ஆஸ்திரேலியா

48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132
ஃபிஞ்ச்-25, கவாஜா-41*, பெய்ன்-8*
பந்துவீச்சு: ஷமி-2/23, பும்ரா-1/25, இஷாந்த்-1/33

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com