பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

பெர்த்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 
பெர்த் டெஸ்ட்: 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா

தொடரை 1-1 என சமன் செய்தது

பெர்த்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 
வெற்றிக்கு 175 ரன்கள் தேவை என்ற நிலையில் செவ்வாய்க்கிழமை ஆடத் தொடங்கிய இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வரும் இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. 
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களையும், இந்தியா 283 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. கேப்டன் விராட் கோலி அற்புதமாக ஆடி சதமடித்தார். 
இதன் தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா-டிம் பெய்ன் இணை ஆஸி.யை சரிவில் இருந்து மீட்டது. 
இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 287 ரன்களை நிர்ணயித்தது. 
தொடர்ந்து ஆடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களுடன் நிறைவு செய்தது. ஹனுமா விஹாரி-பந்த் இணை ஆட்டமிழக்காமல் இருந்தது.
வெற்றி பெற 175 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை இந்திய வீரர்கள் ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோர் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். 

நிலைகுலைந்த இந்திய பேட்டிங்
24 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய ஹனுமா, மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் 28 ரன்களுக்கு ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரிஷப் பந்த் 9 ரன்களோடு தனது ஆட்டத்தை தொடர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்க தனி ஆளாக போராடினார். 30 ரன்கள் எடுத்த பந்த், லயன் பந்துவீச்சில் அவுட்டானார்.
அதன் பின் இந்திய அணியின் வீழ்ச்சி எளிதாகி விட்டது. உமேஷ் யாதவ் 23 பந்துகள் நின்று 2 ரன்களுக்கு ஸ்டார் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இஷாந்த் சர்மா,பும்ரா ஆகியோர் டக் அவுட்டாயினர். சமி ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் இருந்தார். 
கடைசி 5 விக்கெட்டுகள் 28 ரன்களில் சரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது. 
இறுதியில் 56 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

லயன் நாதன், ஸ்டார்க் அபாரம்
ஆஸி. தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் லயன் நாதன் 3-39, மிச்செல் ஸ்டார்க் 3-46, விக்கெட்டையும், ஹேஸல்வுட் 2-24, பேட் கம்மின்ஸ் 2-25 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி பெர்த் டெஸ்ட்டை வென்றது. இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
லயன்- ஆட்ட நாயகன்
ஆஸி. பந்துவீச்சாளர் நாதன் லயன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டை வீழ்த்திய நாதன் லயன் தனது அணி வெற்றிக்கு வித்திட்டார்.

வெற்றியால் மன நிம்மதி

முதன்முறையாக பெர்த் டெஸ்டில் பெற்றவெற்றியால் மனம் நிம்மதி அடைந்துள்ளது. கடந்தசில மாதங்களாக ஆஸி. அணியின் ஆட்டத்திறன் மேம்பட்டு வருகிறது. 
இந்த வெற்றி அதற்கு கிடைத்த விருதாகும். சிறந்த ஆட்டமான இதில் பந்து அதிக உயரத்துக்கு எழும்பியது. பிட்ச் ரோலர் மூலம் சமன் செய்யப்பட்ட நிலையிலும், எங்கள் பெளலர்கள் சிறப்பாக பந்துவீசினர். கவாஜா சிறப்பாக ஆடினார். லயன் அணியில் இடம் பெற்றது சிறப்பானது. 
மெல்போர்ன் டெஸ்டை எதிர்நோக்கி உள்ளோம். கோலிக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. 
இரு அணிகளும் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆக்ரோஷமாக ஆடினோம். கோலி ஆடியதை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். போட்டி மனைப்பான்மையுடன் தான் மோதிக் கொண்டோம் என்றார்.
டிம் பெய்னின் முதல் வெற்றி
தென்னாப்பிரிக்காவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை உப்பு காகிதம் கொண்டு சேதப்படுத்தி புகார் தொடர்பாக கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், வீரர் பேங்கிராப்ட் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் டிம் பெய்ன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். பெய்ந் தலைமையில் ஆஸி. அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
அதே போல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜஸ்டின் லாங்கர் தலைமையில் கிடைத்த முதல் வெற்றியும் இதுவாகும்.

4 வேகப்பந்து வீச்சாளர்களே போதும் எனக் கருதினோம்: கோலி
ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக தான் ஆடினோம். சில பகுதிகளாக வீரர்கள் ஆடினர். இதன் மூலம் கிடைத்த அனுபவங்களை அடுத்த ஆட்டத்தில் பின்பற்றுவோம். எங்களை விட ஆஸி. வீரர்கள் நன்றாக ஆடினர். இந்த வெற்றி அவர்களுக்கு உரியது. நீண்ட நேரம் மைதானத்தில் ஆடி ரன் குவித்தனர். நமது பெளலர்களும் மிகச்சிறப்பாக பந்துவீசினர். இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆதிக்கம் செலுத்தினர். பிட்சின் தன்மையை பார்த்தபோது ஜடேஜா தேவையில்லை என கருதினோம். 4 வேகப்பந்து வீச்சாளர்களே போதும் என நினைத்தோம். சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது குறித்து வருத்தப்பட ஏதுமில்லை. மைதானத்தில் எனக்கும் ஆஸி. கேப்டன் டிம் பெய்னுக்கும் இடையே எந்த தரக்குறைவான வாக்குவாதமும் ஏற்படவில்லை. தனிப்பட்ட முறையில் பேசவில்லை. எந்த எல்லையையும் நான் தாண்டவில்லை. கிரிக்கெட் ஆட்டத்தில் எப்போதும் நாம் வெல்ல முடியாது. வீரர்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்பே ஏற்று செயல்பட வேண்டும். நம்பிக்கையின்மையுடன் வீரர்கள் ஆடவில்லை என்றார்.
அயல்நாட்டில் இந்தியா பெறும் 7-ஆவது தோல்வி 
நிகழாண்டில் வெளிநாட்டில் இந்தியா பெறும் 7-ஆவது தோல்வியாகும். இதுவரை 3 டெஸ்ட்களில் வென்றுள்ளது. 

3,4-ஆவது டெஸ்ட் அணிகள் அறிவிப்பு
26-இல் மெல்போர்னில் மூன்றாவது டெஸ்ட் இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் (பாக்ஸிங் டே டெஸ்ட்) வரும் 26-ஆம் தேதி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வென்று தொடரில் முன்னிலை பெற இந்தியா முயலும் எனக் கருதப்படுகிறது.
இந்தியா
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கேஎல்.ராகுல், சேதேஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பார்த்திவ் பட்டேல், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹார்திக் பாண்டியா, மயங்க் அகர்வால்.

ஆஸ்திரேலியா
ஆஸி. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை:
டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பின்ச், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸல்வுட். டிராவிஸ் ஹெட். உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிச்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், பீட்டர் சிடில், மிச்செல் ஸ்டார்க்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com