வெற்றியை நோக்கி நகரும் நியூஸிலாந்து: 4-ம் நாள் முடிவில் இலங்கை 231/6

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி கடுமையாகப் போராடி வருகிறது.
வெற்றியை நோக்கி நகரும் நியூஸிலாந்து: 4-ம் நாள் முடிவில் இலங்கை 231/6

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க இலங்கை அணி கடுமையாகப் போராடி வருகிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் 660 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் இலங்கை 4-வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. 

கடந்த 26ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 41 ஓவர்களில் 104 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து 2-வது இன்னிங்ஸில் 153 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணி வெற்றி பெற 660 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. 

இந்நிலையில் இன்று இலங்கை அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி நியூஸிலாந்தின் வெற்றியைத் தாமதமாக்கியுள்ளார்கள். சண்டிமல் 228 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களும் மெண்டிஸ் 147 பந்துகளில் 67 ரன்களும் எடுத்தார்கள். 4-ம் நாள் முடிவில் இலங்கை அணி 104 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. பெரேரா 22, லக்மல் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். வாக்னர் 3, செளதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். ஆட்டம் நிறைவடைய ஒரு நாளே உள்ள நிலையில், இலங்கை அணி 4 விக்கெட்டுகளைக் கொண்டு 429 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் இந்த டெஸ்டை வென்று 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com