ரபாடா, ஷம்ஸியிடம் சரணடைந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் - முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரபாடா, ஷம்ஸியிடம் சரணடைந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் - முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதன் முதல் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அந்த அணியில் குசால் பெரேரா மற்றும் திசாரா பெரேரா மட்டும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். திசாரா பெரேரா 30 பந்துகளில் 49 ரன்களும், குசால் பெரேரா 72 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இலங்கை அணி 34.3 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரபாடா மற்றும் ஷம்ஸி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர். ஆம்லா அதிரடியாக 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். 

இதையடுத்து, டி காக் மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் நிதானமாக விளையாடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். இருவரும் தலா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டுமினி அதிரடியாக ரன் குவித்து வெற்றி இலக்கை அடையச் செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுமினி 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி 31 ஓவரில் 196 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஷம்ஸி தட்டிச் சென்றார். 

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. 

இருஅணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com