6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 20 பந்துகளில் சதம்: ரித்திமான் சாஹா 'அபூர்வ' சாதனை!

கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் 20 பந்துகளில் சதமடித்து ரித்திமான் சாஹா சாதனைப் படைத்துள்ளார்.
6 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 20 பந்துகளில் சதம்: ரித்திமான் சாஹா 'அபூர்வ' சாதனை!

கொல்கத்தாவில் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக ஜெ.சி.முகர்ஜீ டி20 கிரிக்கெட் உள்ளூர் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் மோஹுன் பாகன் மற்றும் பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப்புகளுக்கு இடையிலான போட்டி கலிகாட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா 20 பந்துகளில் சதமடித்து அபூர்வ சாதனையைப் படைத்துள்ளார்.

முதலில் களமிறங்கிய பி.என்.ஆர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதில், மோஹுன் பாகன் அணிக்காக விளையாடி சாஹா, 4 கேட்சுகளைப் பிடித்தார். மேலும் ஒரு ரன்-அவுட்டையும் நிகழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய மோஹுன் பாகன் அணி 7 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கேப்டன் ஷுபமோய் தாஸ் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், ரித்திமான் சாஹாவின் ஆட்டம் திருப்புமுனையாக அமைந்தது. 

மொத்தம் 14 இமாலய சிக்ஸர்களை விளாசியதுடன், 4 பவுண்டரிகளையும் விரட்டி வெறும் 20 பந்துகளிலேயே சதமடித்தார் ரித்திமான் சாஹா. ஸ்டிரைக் ரேட் 510.00 ஆக அமைந்தது. இதில் ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசினார். முதல் ரன்னை ஓடி எடுத்த சாஹா, சிக்ஸருடன் ஆட்டத்தை முடித்து 102 ரன்களுடன் களத்தில் நின்றார். 12 பந்துகளில் அரைசதம் கடந்தவர், அடுத்த 8 பந்துகளில் மீதமுள்ள 50 ரன்களை விளாசியுள்ளார்.

போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரித்திமான் சாஹா (வயது 33) இதுகுறித்து கூறியதாவது:

இது சாதனையா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நான் இங்கு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் பந்தை சந்தித்தவுடனேயே அதிரடியாக ஆட முடிவு செய்துவிட்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக செயல்பட வரும்புகிறேன். மற்றவை அணித் தேர்வாளர்களிடம்தான் உள்ளது. டி20 போட்டியைப் பொறுத்தவரையில் துவக்க வீரராக களமிறங்கவே விரும்புகிறேன். ஆனால், சன்ரைஸர்ஸ் அணியில் தவன் மற்றும் வார்னர் உள்ளனர். எனவே எந்த இடத்திலும் களமிறங்க தயாராக இருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com