இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவேனா?: டேவிட் வார்னர் சந்தேகம்!

நான் ஓய்வு பெறுவேனா என்றும் கேள்வி எழுப்புகிறீர்கள். என்னுடைய குடும்பத்துடன் இணைந்து அனைத்து விதமான ஆலோசனைகளையும்...
இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவேனா?: டேவிட் வார்னர் சந்தேகம்!

ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான பான்கிராஃப்ட், தன்னிடம் இருந்த சொரசொரப்பு தன்மை கொண்ட பொருளை வைத்து பந்தைச் சேதப்படுத்த முயன்றது கேமராக்களின் கண்களில் பதிவாகியது. இதையடுத்து, அந்தப் பொருளை அவர் தனது ஆடைக்குள் மறைத்து வைத்தார். ஆட்டம் முடிவடைந்ததும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக் கொண்டனர். அத்துடன், ஸ்மித்தும், டேவிட் வார்னரும் அணியில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவருக்கும் ஓராண்டு காலம் தடை விதித்து 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பான்கிராஃப்டுக்கு 9 மாத காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த வியாழக்கிழமை தாய்நாடு திரும்பிய மூன்று வீரர்களும் தங்களது செயலுக்காக வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டேவிட் வார்னர், தன்னுடைய விளக்கத்தைப் பதிவு செய்தார். அவர் கூறியதாவது:

என் கிரிக்கெட் வாழ்வில் எனக்கு ஆதரவாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மீதான அவர்களுடைய நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்ததற்காக.

நான் உங்களை ஏமாற்றிவிட்டேன். உங்கள் மரியாதையை மீண்டும் பெறுவேன் என்கிற நம்பிக்கை உண்டு.

என் சக வீரர்களுக்கு - என்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அன்று நடந்த சம்பவத்துக்கு என் பங்களிப்பு தொடர்பாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். உங்களுடன் இணைந்து அடுத்த ஒரு வருடம் விளையாட முடியாததை எண்ணி வருத்தப்படுகிறேன். 

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய விசாரணைக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.

தென் ஆப்பிரிக்க மக்களிடமும் கிரிக்கெட் நிர்வாகிகள், ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் மண்ணில் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளேன். தென் ஆப்பிரிக்கா அருமையான கிரிக்கெட் தேசம்.

ஆஸ்திரேலிய அணிக்கு விளையாடுவதன் மூலம் நாட்டுக்குப் பெருமைத் தேடித்தரத்தான் எப்போதும் முயல்வேன். அதற்கான ஒரு முயற்சியில் ஈடுபடும்போது எதிர்விளைவுகள் உண்டாகும்படியான
தவறைச் செய்துவிட்டேன். என் வாழ்நாள் முழுக்க இந்தத் தவறுக்காக வருந்துவேன்.

நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கை துளிர் விடுகிறது. அதேசமயம் இனி நான் விளையாட முடியாது என்கிற உண்மையை உணர்ந்தே உள்ளேன். 

தவறு எப்படி நடந்தது என்று என்னை ஆய்வுக்கு உட்படுத்துவேன். இதுகுறித்த தகுந்த ஆலோசனைகளை நாடுவேன்.

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், பான்கிராஃப்ட் பங்களிப்பு குறித்துக் கேட்கிறீர்கள். இங்கு நான் என்னுடைய தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவே வந்துள்ளேன். இந்த விவகாரத்திலிருந்து விலகிச் செல்லவேண்டும் என்றே எண்ணுகிறேன். 

நான் ஓய்வு பெறுவேனா என்றும் கேள்வி எழுப்புகிறீர்கள். என்னுடைய குடும்பத்துடன் இணைந்து அனைத்து விதமான ஆலோசனைகளையும் பெற்று நடவடிக்கை எடுப்பேன். அடுத்தது என்ன என்று தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு என் குடும்பமும் அவர்களுடைய நலனும் முக்கியம். என் குடும்பத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளதை எண்ணி வருத்தப்படுகிறேன். இதுபோல நிச்சயம் நடக்காது என்று கூறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com