மீண்டும் ரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா! 11 விக்கெட்டுகள் எடுத்து சர்வேட் அசத்தல்!

ரஞ்சி போட்டி வரலாற்றில் 6-வது முறையாக ஓர் அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது...
மீண்டும் ரஞ்சி சாம்பியன் ஆனது விதர்பா! 11 விக்கெட்டுகள் எடுத்து சர்வேட் அசத்தல்!

செளராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டி இறுதி ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் ஆகியுள்ளது விதர்பா அணி. 

இரு அணிகளுக்கு இடையிலான இறுதிச் சுற்று ஆட்டம் நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில், செளராஷ்டிர அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விதர்பா ஆரம்பத்தில்  7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் விதர்பா அணியின் பேட்ஸ்மேன்கள் அக்ஷய் கர்னேவர் 73, அக்ஷய் வாக்ரே 34 ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில் 120.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்களை எடுத்தது விதர்பா. செளராஷ்டிரா தரப்பில் உனாட்கட் 3, சகாரியா, மக்வானா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய செளராஷ்டிர அணி, முதல் இன்னிங்ஸில் 117 ஓவர்களில் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது விதர்பா அணி. 

இதன்பிறகு 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணி, 92.5 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சர்வேட் 49 ரன்கள் எடுத்து அணிக்கு உதவினார். செளராஷ்டிர அணியின் தர்மேந்திரசின் ஜடேஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு 206 ரன்கள் என்கிற இலக்குடன் ரஞ்சிக் கோப்பைக் கனவுடன் களமிறங்கிய செளராஷ்டிர அணி, விதர்பா அணியின் சிறப்பான பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. சர்வேட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விதர்பா அணிக்கு உதவியுள்ளார். செளராஷ்டிர அணியின் தூணான புஜாராவை ரன் எதுவும் எடுக்கவிடாமல் வெளியேற்றினார். 4-ம் நாளின் முடிவில் செளராஷ்டிர அணி, 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்களிலும் கம்லேஷ் மக்வானா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். 

ரஞ்சிக் கோப்பையை செளராஷ்டிர அணி வெல்ல, 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 148 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. இதனால் இந்த வருடமும் ரஞ்சிக் கோப்பை விதர்பா அணி வெல்வதற்கான சூழல் உருவானது.

இன்று 30 ரன்கள் சேர்த்த நிலையில் 6 பந்துகளின் இடைவெளியில் மக்வானா 14 ரன்களிலும் மன்கட் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதனால் செளராஷ்டிர அணியின் ஒரே நம்பிக்கையாக விளங்கினார் விஸ்வராஜ் ஜடேஜா. ஆனால் அவருடைய விக்கெட்டை 52 ரன்களில் வீழ்த்தினார் சர்வேட். இதையடுத்து விதர்பா அணியின் வெற்றி உறுதியானது. பிறகு உனாட்கட்டை 7 ரன்களில் சர்வேட் வீழ்த்த, கடைசியாக தர்மேந்திரசின் ஜடேஜாவை 17 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் வாகரே. இதையடுத்து செளராஷ்டிர அணி, 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்குச் சுருண்டது. இதனால் 78 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப் போட்டியை வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி சாம்பியன் ஆகியுள்ளது விதர்பா அணி.

2-வது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் சர்வேட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார். இந்த இறுதி ஆட்டத்தில் சர்வேட் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதுத் தேர்வானார். 

ரஞ்சி போட்டி வரலாற்றில் 6-வது முறையாக ஓர் அணி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் செளராஷ்டிரா அணி தோற்கும் மூன்றாவது இறுதிப் போட்டி இது. 2012-13 மற்றும் 2015-16 ஆகிய சீஸன்களில் மும்பையிடம் இறுதிச்சுற்றில் தோற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com