அடியாள்களால் தாக்கப்பட்ட இந்திய முன்னாள் வீரர்! அணியில் தன்னைத் தேர்வு செய்யாததால் பழிவாங்கிய இளம் வீரர்!

இந்திய முன்னாள் வீரரும் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழுத் தலைவருமான அமித் பண்டாரி, இளம் வீரர் ஒருவரின் பழிவாங்கும் நடவடிக்கையால்...
அடியாள்களால் தாக்கப்பட்ட இந்திய முன்னாள் வீரர்! அணியில் தன்னைத் தேர்வு செய்யாததால் பழிவாங்கிய இளம் வீரர்!

இந்திய முன்னாள் வீரரும் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழுத் தலைவருமான அமித் பண்டாரி, இளம் வீரர் ஒருவரின் பழிவாங்கும் நடவடிக்கையால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தில்லி செயிண்ட் ஜோசப் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் ஒன்று நடந்துகொண்டிருந்தபோது அங்கிருந்த தேர்வுக்குழுத் தலைவர் அமித் பண்டாரி, மர்ம நபர்களால் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார். 15 அடியாள்கள், இரும்புக் கம்பிகள் மற்றும் ஹாக்கி மட்டைகளைக் கொண்டு அவரைத் தாக்கியுள்ளார்கள். பண்டாரியைக் காப்பாற்ற வந்த கிரிக்கெட் வீரர்களைத் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி அப்புறப்படுத்தியுள்ளார்கள். இதையடுத்து உடனடியாகக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. எனினும் பண்டாரியைத் தாக்கியவர்கள் காவலர்கள் மைதானத்துக்கு வருவதற்கு முன்பு தப்பி ஓடிவிட்டார்கள். பிறகு, சக தேர்வுக்குழு உறுப்பினரான சுக்விந்தர் சிங், பலமாகக் காயமடைந்த பண்டாரியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தேசிய அளவிலான யு-23 போட்டிக்கான தில்லி வீரர்களின் உத்தேசப் பட்டியல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இடம்பெறாத வீரர் ஒருவர், அமித் பண்டாரி மீதான கோபத்தாலும் பழிவாங்கும் குணத்தாலும் இதுபோன்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதையடுத்து தில்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பண்டாரியின் தலையிலும் காலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் அவருடைய உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது. அடியாள்கள் தன்னைக் கைத்துப்பாக்கி கொண்டு மிரட்டியதாகவும் பண்டாரி கூறியுள்ளார். 

அமித் பண்டாரி இந்திய அணிக்காக இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் அணியில் தன்னைத் தேர்வு செய்யாத தேர்வுக்குழுத் தலைவரை இளம் வீரர் ஒருவர் அடியாள்கள் வைத்து தாக்கிய சம்பவம் கிரிக்கெட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com