விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் சிமோனா; சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்தார் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ருமேனியாவின் சிமோனா ஹலேப்.
விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் சிமோனா; சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்தார் செரீனா

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ருமேனியாவின் சிமோனா ஹலேப்.
 இதனால் 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்தார் செரீனா.
 லண்டனில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் 23 முறை சாம்பியன் செரீனாவும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலேப்பும் மோதினர்.
 ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கம் முதலே சிமோனா ஆதிக்கம் செலுத்தினார். அவரது சர்வீஸ்கள், ஷாட்களுக்கு பதில் கூற முடியாமல் தடுமாறிய செரீனா, இறுதியில் 6-2, 6-2 என நேர்செட்களில் வீழ்ந்தார். 56 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. செரீனா 26 தவறுகளையும், சிமோனா 2 தவறுகளையும் புரிந்தனர்.
 கோப்பையுடன், சிமோனாவுக்கு ரூ.20.25 கோடி பரிசளிக்கப்பட்டது.
 மார்க்ரெட் கோர்ட் நிகழ்த்திய 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை சமன் செய்யும் செரீனாவின் கனவு நிராசையானது குறிப்பிடத்தக்கது.
 ஆடவர் இறுதியில் பெடரர்-ஜோகோவிச் இன்று மோதல்
 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்-முன்னாள் சாம்பியன் பெடரர் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றனர்.
 அரையிறுதி ஆட்டங்களில் மற்றொரு ஜாம்பவான் நடாலை வென்று 12-ஆவது முறையாக விம்பிள்டன் இறுதிச் சுற்றில் நுழைந்தார் பெடரர்.
 கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பின் 11 ஆண்டுகள் கழித்து ஆடிய இந்த ஆட்டமே தலைசிறந்த ஆட்டம் என பெடரர் கூறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் பட்டிஸ்டுவாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக ஜோகோவிச் இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் நோக்கில் பெடரரும், 6-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஜோகோவிச்சும் களமிறங்குவதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
 கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய வயதான வீரர்கள் பட்டியலில் பெடரர் 3-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
 21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா பெடரர் அல்லது 15-ஆவது பட்டத்தை வெல்வாரா ஜோகோவிச் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் இருவரும் நேருக்கு நேர் மோதியதில் 25 முறை ஜோகோவிச்சும், 22 முறை பெடரரும் வென்றுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com