தோனியும், ரோஹித்தும் இருப்பதால்தான் கோலி சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார்: கௌதம் கம்பீர்

ரோஹித் சர்மாவும், தோனியும் அணியில் இருப்பதால்தான் விராட் கோலி இந்திய அணியின் சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறினார்.
தோனியும், ரோஹித்தும் இருப்பதால்தான் கோலி சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார்: கௌதம் கம்பீர்


ரோஹித் சர்மாவும், தோனியும் அணியில் இருப்பதால்தான் விராட் கோலி இந்திய அணியின் சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறினார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர் தோனி. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த கேப்டனாக  செயல்பட்டார் ரோஹித் சர்மா. இந்திய அணிக்கு இவர் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில் 4 முறை மும்பை இந்தியன்ஸ் சாம்பியனாகியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அணியை விராட் கோலி சிறப்பாக வழிநடத்தினார். இருப்பினும், அவர் இன்னும் அதிகம் பயணப்பட வேண்டியுள்ளது.
ரோஹித், தோனி என்ற இரண்டு சிறந்த கேப்டன்கள் அணியில் இருப்பதால்தான், விராட் கோலி சிறந்த கேப்டனாகத் திகழ்கிறார்.
கோலியின் கேப்டன் திறனை ஐபிஎல் போட்டியின் மூலமே நாம் அறிந்துகொள்ள முடியும். சிறந்த வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை என்றால் கேப்டனாக எத்தனை சிறப்பாகச் செயல்பட்டாலும் எடுபடாது. அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் ஆதரவு அளித்தால் மட்டுமே அணியின் வெற்றி சாத்தியம். உதாரணத்துக்கு, தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வெற்றி பெற்றதையும், ரோஹித் மும்பை இந்தியன்ஸை வழிநடத்தி வெற்றி பெற்றதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
ரோஹித்தை டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்ய வேண்டும். அவர் சிறந்த வீரர். 2007ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு என்னைத் தேர்வு செய்யாததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என்று கருதியிருந்தேன். அதன்பிறகு, அதே ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்யப்பட்டேன். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அந்த விருப்பம் ஐபிஎல் தொடரில் மட்டுமே நிறைவேறியது. தில்லி கிரிக்கெட் சங்கத்தைப் பொருத்தவரை எந்த வீரருக்கும் சாதகமாக செயல்படாது. சிறந்த வீரராக இருந்தால் மட்டுமே தேர்வு செய்யப்படுவீர்கள் என்றார் கம்பீர்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற கம்பீர், பாஜகவில் சேர்ந்து எம்.பி.யானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com