ஒலிம்பிக் தகுதிச்சுற்று கால்பந்து: இந்தோனேஷியாவை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்திய மகளிர் கால்பந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷிய அணியை புதன்கிழமை
இந்தோனேஷிய வீராங்கனையிடம் இருந்து பந்தை கடத்திச் செல்லும் இந்திய வீராங்கனை.
இந்தோனேஷிய வீராங்கனையிடம் இருந்து பந்தை கடத்திச் செல்லும் இந்திய வீராங்கனை.


ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்திய மகளிர் கால்பந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷிய அணியை புதன்கிழமை வீழ்த்தியது. இதன்மூலம், இந்திய மகளிரணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பை மேலும் நெருங்கியுள்ளது. 
மியான்மரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் டாங்மேய் கிரேஸ் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடிக்கோலினார். 
ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 24-ஆவது நிமிடத்தில் சஞ்சு திறம்பட கடத்திச் சென்று கோலடிக்க முயன்றார். அப்போது இந்தோனேஷிய தடுப்பாட்ட வீராங்கனை அதைத் தடுக்க முயன்றபோது ஓன் கோல் ஆக முற்பட்டது. எனினும், அதை அவர் நூழிலையில் தடுத்தார். 
மற்றொரு இந்திய வீராங்கனை சந்தியா 26-ஆவது நிமிடத்தில், சஞ்சு பாஸ் செய்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் அனுப்ப முயன்றார். எனினும், இந்தோனேஷிய தடுப்பாட்ட வீராங்கனை ரிஸ்கா ஜுலியான்டி அதை அரண் போல் தடுத்தார்.
இவ்வாறாக கோலின்றி தொடர்ந்த ஆட்டத்தின் 27-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினார் டாங்மேய் கிரேஸ். அவர் அடித்த கோலால் முதல் பாதி முடிவில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்திலும் இந்தோனேஷியாவுக்கு கோல் வாய்ப்பு வழங்கவில்லை இந்தியா.
 56-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் ரத்னபாலா தேவி தொலைவிலிருந்து கோல் போஸ்டுக்குள் அனுப்ப முயன்ற பந்தை இந்தோனேஷிய கோல் கீப்பர் லாவகமாகத் தடுத்தார்.
59-ஆவது நிமிடத்தில் சஞ்சு பாஸ் செய்து, டாங்மேய் கிரேஸ் அடிக்க முயன்ற கோல் வாய்ப்பும் பொய்த்துப்போனது. இறுதியாக ஆட்டத்தின் 67-ஆவது நிமிடத்தில் சுமித்ரா காமராஜ் பாஸ் செய்த பந்தை தவறாமல் கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினார் டாங்மேய். இதனால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
வெற்றிக்குப் பிறகு இந்திய பயிற்சியாளர் மேய்மோல் ராக்கி கூறுகையில், ஒலிம்பிக் தகுதிச்சுற்றை வெற்றியுடன் தொடங்க எண்ணினோம். அவ்வாறே தொடங்கிவிட்டோம். சவாலான அணியாக இருந்த இந்தோனேஷியா தடுப்பாட்டத்தை திறம்பட கையாண்டது. நமது அணி சற்று தடுமாறினாலும், கோல் வாய்ப்புக்கான சரியான இடைவெளியை கண்டறிந்து விளையாடியது. அடுத்த ஆட்டத்தில் வரும் 6-ஆம் தேதி நேபாள அணியை நாம் எதிர்கொள்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com