ஹாக்கி: இந்தியா-மலேசியா தொடர் இன்று தொடக்கம்

மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதும் 5 ஆட்டங்களைக் கொண்ட தொடர் வியாழக்கிழமை கோலாலம்பூரில்

மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதும் 5 ஆட்டங்களைக் கொண்ட தொடர் வியாழக்கிழமை கோலாலம்பூரில் தொடங்குகிறது.
இந்த ஆண்டை ஸ்பெயின் சுற்றுப் பயணத்துடன் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ள இந்திய மகளிரணி, அதன் பிறகு எதிர்கொள்ளும் முதல் தொடர் இதுவாகும். அந்த சுற்றுப் பயணத்தில், ஸ்பெயின் அணியை ஒரு ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, இரு ஆட்டங்களை டிரா (1-1, 2-2) செய்தது. 
ஒரு ஆட்டத்தில் தோல்வி (2-3) கண்டது. அதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, மற்றொரு ஆட்டத்தை 1-1 என டிரா செய்தது. 
உலகக் கோப்பை போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற அயர்லாந்து, ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து தற்போது மலேசிய அணி எதிர்கொள்கிறது சவிதா தலைமையிலான இந்திய அணி.
முன்னதாக, மலேசியாவை 2017-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் ரவுண்ட் ராபின் சுற்றில் எதிர்கொண்ட இந்தியா அதில் 2-0 என அந்த அணியை வீழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் பட்டமும் வென்றிருந்தது.
இந்நிலையில் இந்திய மகளிரணி பயிற்சியாளர் ஜோர்ட் மாரிஜ்னே கூறுகையில், கடந்த சில காலமாக மலேசிய அணிக்கு எதிராக நாம் விளையாடாததால், இந்தத் தொடரில் அவர்களது ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க இயலாது. 
எனினும், ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர்களின் ஆட்டத்தை பார்த்தபோது, நீண்டதூர ஏரியல் ஷாட்களை அதிகம் பயன்படுத்திய மலேசிய அணியினர், தடுப்பாட்டத்தை மிகச் சிறப்பாகக் கையாண்டனர் என்றார்.
இந்த ஹாக்கி தொடரில் இந்திய-மலேசிய அணிகள் இடையேயான ஆட்டம், வியாழக்கிழமையைத் தொடர்ந்து வரும் 6, 8, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com