மே.இ.தீவுகள்-இந்தியா இடையே இன்று முதல் டி20

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் சனிக்கிழமை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.
மே.இ.தீவுகள்-இந்தியா இடையே இன்று முதல் டி20


இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான முதல் டி20 ஆட்டம் சனிக்கிழமை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பெற்ற தோல்விக்கு பின் முதன்முறையாக விராட் கோலி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.
3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்கள் என ஏறக்குறைய 1 மாதம் இந்திய அணி, மே.இ.தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதில் முதல் 2 டி20 ஆட்டங்கள் மட்டும் புளோரிடாவில் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சோபிக்காத மூத்த வீரர் தினேஷ் கார்த்திக், ஆல்ரவுண்டர்கள் விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு, மே.இ.தீவுகள் தொடருக்கு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இளம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு முழு ஓய்வு தரப்பட்டது.
ரோஹித், ஷிகர் தவன், விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் முதல் நான்கு இடங்களில் வழக்கம் போல் களமிறங்குவர். 
தோனி இல்லாத நிலையில் ரிஷப்பந்த்துக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. 
இதனால் அணி அனுபவம், இளமை கலந்ததாக உள்ளது.  ஷிரேயஸ் ஐயர், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர் என இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கவும், 2020 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.


சவால் தரும் மே.இ.தீவுகள்: டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியினர் அற்புதமாக ஆடும் திறன் பெற்றவர்களாக உள்ள நிலையில், இந்திய அணி இச்சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உலகக் கோப்பையில் பெற்ற படுதோல்வியை மறந்து டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் அந்த அணி போராடும். எங்கள் அணியும் மூத்த மற்றும் இளம் வீரர்கள் கலந்ததாக துடிப்புடன் உள்ளது என அதன் பயிற்சியாளர் பிளாயிட் ரிபையர் தெரிவித்தார்.


கெயில் சாதனையை முறியடிப்பாரா ரோஹித்?


டி20 ஆட்டங்களில் கிறிஸ் கெயில் படைத்த அதிக சிக்ஸர்கள் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்கள், மார்டின் கப்டில் 103 சிக்ஸர்கள் என முதலிரண்டு இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா 102 சிக்ஸர்களுடன் உள்ளார். 
இத்தொடரில் 4 சிக்ஸர்களை ரோஹித் விளாசனால், புதிய உலக சாதனையை படைப்பார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் புதுமுக வீரர்கள்
மே,இ,தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடவுள்ள இந்திய அணியில் இளம் புதுமுக வீரர்கள்
இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திறமையாக ஆடி இந்திய அணியில் நிலையான இடத்தை பெறுவர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷிரேயஸ் ஐயர்
ஐபிஎல் தொடரில் தில்லி அணியின் கேப்டனாக திறமையாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தனது அணியை தகுதி பெறச் செய்தார். கடந்த 2017-இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமான ஷிரேயஸ் 6 ஆட்டங்களில் ஸ்ட்ரைக் ரேட் 96.33 ஆகும்.  ஒருநாள் தொடரில் ஆடி ஓராண்டுக்கு மேலான நிலையிலும், உள்ளூர் ஆட்டங்களில் ஷிரேயஸ்  ஐயர் பேட்டிங் அபாரமாக உள்ளது. ஐபிஎல் 2019-இல் 463 ரன்களை விளாசினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷிரேயஸ் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப தகுதியானவர்.

தீபக் சாஹர் 
26 வயதான ஸ்விங் பவுலரான தீபக் சாகர் 2018-இல் ஒருநாள், டி20 ஆட்டத்தில் அறிமுகமானார். எனினும் தொடர்ந்து சர்வதேச அனுபவம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ள தீபக், ரஞ்சி போட்டியில் 8-10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனைத்து நேரங்களிலும் கட்டுப்பாடாகவும், பந்தை ஸ்விங் செய்வதும் அவரது திறனாகும்.

ராகுல் சாஹர்
தீபக் சாஹரின் உறவினரான ராகுல், 2019 ஐபிஎல் போட்டிக்காக ரூ.1.9 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.
 லெக் ஸ்பின்னரான ராகுல், ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகளை சாய்த்தார். 
மிடில் ஓவர்களில் சிறப்பாக வீசும் ராகுல், இந்திய ஏ அணியில் இடம் பெற்றார். தற்போது ஒருநாள், டி20 தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

க்ருணால் பாண்டியா
ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா,  பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் திறம்பட செயல்படக் கூடியவர். இந்திய அணியில் நிலையான இடத்தை அவரால் இன்னும் பெற முடியவில்லை. 11 டி20 ஆட்டங்களில் ஆடிய க்ருணால் 11 விக்கெட், 70 ரன்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ஆடி வருகிறார். மே.இ.தீவுகள் தொடரில் சிறப்பாக ஆடுவார் எனக் கருதப்படுகிறது.

வாஷிங்டன் சுந்தர்
தமிழக ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், 19 வயது இளம் வீரராவார். கடந்த 2017 ஐபிஎல்லில் புணே அணியில் சிறப்பாக ஆடியதால், அப்போதே இந்திய ஒருநாள், டி20 அணியில் இடம் பெற்றார். ஓரே ஒருநாள் ஆட்டத்தில் ஆடிய சுந்தர், 7 டி20 ஆட்டங்களில் ஆடி 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். உள்ளூர் டி20 ஆட்டங்களில் 42 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
முக்கிய தருணங்களில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவர் சுந்தர்.  

நவ்தீப் சைனி
ஐபிஎல் 2019 தொடரில் பெங்களூர் அணியில் ஆடிய நவ்தீப் சைனி 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர். 
அவரது துடிப்பான பந்துவீச்சு, உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சிக்கான பந்துவீச்சாளராக தேர்வு பெற உதவியது.  தில்லி அணிக்காக 120 முதல் தர விக்கெட்டுகளையும்,  உள்ளூர் டி20 ஆட்டங்களில் 30 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com