இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என தீவிர  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என தீவிர  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த உலகக் கோப்பையுடன் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு 45 நாள்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
புதிய தலைமை பயிற்சியாளர், இதர பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ சிஓஏ அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30-ஆம் தேதி  இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய ஜாம்பவான் கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், மகளிரணி முன்னாள் கேப்டன் சாந்தா ஆகியோர் கொண்ட சிஏசிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கான நேர்காணல் வரும் 16, 17 தேதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
ரவிசாஸ்திரி நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், வெளிநாட்டைச் சேர்ந்த டாம் மூடி  (ஆஸி), மைக் ஹெஸ்ஸன் (நியூஸி), பில் சிம்மன்ஸ் (மே.இ,தீவுகள்) ஆகியோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ளவர்கள் குறித்த விவரம்

டாம் மூடி (ஆஸி)
53 வயதான மூடி பயிற்சியாளராக மிகுந்த அனுபவம் பெற்றவர். ஏற்கெனவே இலங்கை அணி, ஐபிஎல் அணிகளான கிங்ஸ் லெவன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். வங்கதேச, பாகிஸ்தான் லீக் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 8 டெஸ்ட், 76 ஒருநாள், 300 முதல்தர போட்டிகளில் ஆடியவர்.

பில் சிம்மன்ஸ் (மே.இ.தீவுகள்)
மே,இ.தீவுகளின் முன்னாள் அதிரடி ஓபனரான சிம்மன்ஸ், தற்போதைய உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார். ஏற்கெனவே இவரது பயிற்சியின் கீழ் மே.இ.தீவுகள் அணி 2016 டி20 உலகக் கோப்பையை வென்றது. அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார் சிம்மன்ஸ். 26 டெஸ்ட், 143 ஒருநாள், 207 முதல்தர போட்டிகளில் ஆடியவர். 

லால்சந்த் ராஜ்புத்
முன்னாள் மும்பை வீரரான ராஜ்புத் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியின் பயிற்சியாளர், டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் மேலாளர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் தேசிய அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும் இருந்த ராஜ்புத், தற்போது கனடா டி20 வின்னிபெக் ஹாக்ஸ் அமியின் பயிற்சியாராக உள்ளார். 
ஆனால் பெரிய அணிகளுக்கு பயிற்சி அளித்த அனுபவம் இல்லாதது ராஜ்புத்துக்கு பாதகமாக உள்ளது. 2 டெஸ்ட், 4 ஒருநாள், 110 முதல் தர ஆட்டங்களில் ஆடியவர்.

ராபின் சிங்
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ராபின் சிங், சிறந்த அனுபவம் உள்ள பயிற்சியாளராக உள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி மற்றும் ஏ அணிகளில் பயிற்சியாளராக செயல்பட்டார். சிறந்த பீல்டரான ராபின் சிங் டி20 அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் இருந்தார். அப்போது 2007 இல் டி20 உலகக் கோப்பையை பெற்றது இந்தியா. ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். தற்போது மும்பையின் பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார். இலங்கை, வங்கதேச, கரீபிய லீக் அணிகளிலும் பயிற்சி அளித்துள்ளார்.  1 டெஸ்ட், 136 ஒருநாள், 137 முதல்தர ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

மைக் ஹெஸ்ஸன் (நியூஸி)
விண்ணப்பித்துள்ள 6 பேரில் இளையவர் மைக் ஹெஸ்ஸன் (44), நியூஸிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர். இவரது 6 ஆண்டுகள் பயிற்சியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் சிறந்த இடத்தை பெற்றது நியூஸி. மேலும் 2015 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. 
சிறந்த அனுபவம் பெற்றவர். 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு அதில் இருந்து விலகி உள்ளார். டெஸ்ட் ஆட்டங்களில் அதிக பயிற்சி அளித்த அனுபவம் உடையவர்.

ரவிசாஸ்திரி 
கடந்த 2017-இல் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் ரவிசாஸ்திரி, கங்குலி, சச்சின், லஷ்மன் தலைமையிலான சிஏசி சாஸ்திரியை தேர்வு செய்தது. இவரது பயிற்சியில் பெரிய வெற்றி எதையும் இந்திய அணி பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. அண்மையில் நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது இந்தியா.
80 டெஸ்ட், 150 ஒருநாள், 245 முதல்தர ஆட்டங்களில் ஆடியவர். இந்திய அணியின் ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்தவர்.

ஸ்கைப் மூலம் நேர்காணல்
3 வெளிநாட்டு பயிற்சியாளர்கள், ரவி சாஸ்திரி உள்ளிட்டோருக்கு ஸ்கைப் மூலம் 16-ஆம் தேதி நேர்காணலை நடத்துகிறது சிஏசி. மற்ற 2 பேருக்கும் நேரடியாக நேர்காணல் நடக்கிறது. அதற்கு அடுத்த நாள் 17-ஆம் தேதி பிசிசிஐ சிஓஏ புதிய தலைமை பயிற்சியாளரை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
இதர துணை பயிற்சியாளர் பணியிடங்களை சீனியர் தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்யும். தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு, மைக் ஹெஸ்ஸன், டாம் மூடி ஆகியோரே போட்டியாளர்களாக இருப்பர் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com