விராட் கோலிக்குச் சாதகமான நிலையை உருவாக்கினாரா மே.இ. தீவுகள் அணி கேப்டன்?

எதிரணி முதலில் பேட்டிங் செய்கிறபோதும் கடைசியாக இந்திய அணி பேட்டிங் செய்கிற நிலைமை ஏற்படுகிறபோதும்
விராட் கோலிக்குச் சாதகமான நிலையை உருவாக்கினாரா மே.இ. தீவுகள் அணி கேப்டன்?

சமீபகாலமாக டெஸ்ட் ஆட்டங்களில் 5-ம் நாளன்று, கடைசியாக பேட்டிங் செய்வதை எந்த அணியும் விரும்புவதில்லை. அதிலும் இந்திய அணி சமீபகாலமாக அதிகமாகத் தோற்றது, கடைசியாக பேட்டிங் செய்தபோது தான். இதனால் விராட் கோலி டாஸ் வெல்லும்போதெல்லாம் பெரும்பாலும் பேட்டிங்கையே தேர்வு செய்வார். 

ஆனால் கிங்ஸ்டனில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்டில், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர். அவருடைய இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. கோலி இதில் பிரச்னை எதுவும் இருந்திருக்காது. அவர் மனம் சந்தோஷத்தில் துள்ளியிருக்கும். இந்தத் தொடரின் மூலம் 120 புள்ளிகள் அள்ள அற்புதமான வாய்ப்பு. 

கோலி கேப்டனாக விளையாடிய 47 டெஸ்டுகளில் இந்திய அணி 27 டெஸ்டுகளில் வென்றுள்ளது. அதில், இந்திய அணி முதலில் விளையாடிய 28 டெஸ்டுகளில் 22 ஆட்டங்களில் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே தோற்றுள்ளது. 2018-ல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் கிடைத்த தோல்வி அது. முதலில் விளையாடி, 22-ல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டில் தோற்று, 4 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது இந்திய அணி. எனவே டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வது தான் கோலிக்குச் சாதகமான நிலைமை. அதாவது, டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் தோல்வி என்பது மிகவும் அரிதாக இருக்கும். எதிரணி கடைசியில் பேட்டிங் செய்கிறபோது இந்திய அணிக்குப் பெரும்பாலும் வெற்றியே கிடைக்கிறது. 

ஆனால், இந்திய அணி 2-வதாக பேட்டிங் செய்தபோது நிலைமை அப்படியே தலைகீழ். இந்திய அணி முதலில் பந்துவீசிய 20 டெஸ்டுகளில் 5 டெஸ்டுகளில் மட்டுமே கோலிக்கு வெற்றி கிடைத்துள்ளது. 9 முறை தோல்வியடைந்துள்ளார். 6 முறை டிரா ஆகியுள்ளது. எதிரணி முதலில் பேட்டிங் செய்கிறபோதும் கடைசியாக இந்திய அணி பேட்டிங் செய்கிற நிலைமை ஏற்படுகிறபோதும் கோலி பெரும்பாலும் தோல்விகளையே சந்திக்கிறார். 

அதிக டெஸ்ட் வெற்றிகள்: இந்திய கேப்டன்கள்

27 கோலி (47 டெஸ்டுகள்)
27 தோனி (60)
21 கங்குலி (49)
14 அசாருதீன் (47)

டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது...

டெஸ்டுகள் 27
வெற்றி 22
தோல்வி 1 
டிரா 4

டெஸ்ட்: கோலி தலைமையிலான இந்திய அணி முதலில் பந்துவீசியபோது...

டெஸ்டுகள் 20
வெற்றி 5
தோல்வி 9
டிரா 6

இது மே.இ. தீவுகள் கேப்டன் ஹோல்டருக்குத் தெரியாதா? இருந்தும் ஏன் அந்த முடிவைத் தேர்ந்தெடுத்தார். எதற்காக இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து சாதகமான நிலையை உருவாக்கியுள்ளார்? ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் உள்ளன என்று மட்டும் தன் முடிவுக்கான காரணமாக அவர் சொன்னார். இருந்தும் முதல் நாளன்று பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் இருந்தபோதும் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 5 இந்திய பேட்ஸ்மேன்களை மட்டுமே வீழ்த்த முடிந்தது. இதனால் ஹோல்டரின் முடிவு சரிதானா என்கிற விவாதம் எழுந்துள்ளது.

ஹோல்டரின் முடிவு கோலிக்கும் இந்திய அணிக்கும் நன்மை அளிக்குமா? பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com