சதம் அடித்த யாசிர் ஷா: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்!

ஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
சதம் அடித்த யாசிர் ஷா: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்!

ஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 589 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. டேவிட் வார்னர் முச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அஸாம் 43 ரன்களுடனும், யாசிர் ஷா 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இருவரும் 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்த இணை பாகிஸ்தான் அணியை கடுமையான சரிவில் இருந்து ஓரளவு மீட்டது. பொறுப்பாக விளையாடிய பாபர் அஸாம் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, யாசிர் ஷாவும் தன் பங்குக்கு பொறுப்புடன் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்தார். அவரும் 113 ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 302 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 287 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் அந்த அணியை ஃபாலோ ஆன் செய்யுமாறு அழைத்தார். இதன்படி, பாகிஸ்தான் அணி மீண்டும் பேட்டிங் செய்தது.

2-வது இன்னிங்ஸிலும் திணறிய அந்த அணி 20 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து, தொடர் மழை குறுக்கீடு ஏற்பட பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்தபோது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த ஆட்டத்தில் இன்னும் 2 முழு நாட்கள் மீதமுள்ள நிலையில், 248 ரன்கள் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து மற்றொரு இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com