டேவிஸ் கோப்பை: உலகப் பிரிவுக்கு தகுதி பெற்ற இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4}0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
டேவிஸ் கோப்பை: உலகப் பிரிவுக்கு தகுதி பெற்ற இந்தியா


நூர் சுல்தான்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தொடக்க நாளன்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை இரட்டையர் ஆட்டம் நடைபெற்றது. இதில் 18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் லியாண்டர் பயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பாக். இளம் வீரர்கள் முகமது ஷோயிப்-ஹுபைஸô ரஹ்மான் இணையை 53 நிமிடங்களில் வீழ்த்தினர். 
மாற்று ஒற்றையர்-சுமித் நாகல் வெற்றி: இறுதி மற்றும் மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் யூசுப் கலீலை வென்றார். இதன் மூலம் 4-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது இந்தியா
கடந்த 2014-இல் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என வீழ்த்தி இருந்தது இந்தியா. அதன்பின் தற்போது தான் 4-0 என முழுமையாக வென்றுள்ளது.
2020-உலக தகுதிச் சுற்றுக்கு தேர்வு: இந்த வெற்றி மூலம் 2020 உலக தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது இந்தியா. வரும் மார்ச் மாதம் 6-7 தேதிகளில் உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதுகிறது. 12 இடங்களுக்கு தகுதி பெற 24 அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியுற்றும் 12 நாடுகள், செப்டம்பர் 2020-இல் நடக்கும் உலகப் பிரிவு-1 ஆட்டத்தில் மோதும். வெற்றி கண்ட இதர அணிகள், ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள கனடா, பிரிட்டன், ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், செர்பிய அணிகளுடன் இடம்பெறும்.

லியாண்டர் பயஸ் சாதனை:

டேவிஸ் கோப்பை போட்டி இரட்டையர் வரலாற்றில் 43-ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்தார் பயஸ். 56 ஆட்டங்களில் 43-ஆவது வெற்றியைப் பெற்றார். இதற்கு முன்பு இத்தாலியின் நட்சத்திர வீரர் நிகோலா பீட்ரஞ்சலி 66 ஆட்டங்களில் 42 வெற்றிகளை குவித்து சாதனை நிகழ்த்தி இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com