இந்தக் காரணத்துக்காகத் தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி என்னை விடுவித்தது: மனம் திறந்த அஸ்வின்
By எழில் | Published On : 05th December 2019 03:32 PM | Last Updated : 05th December 2019 03:32 PM | அ+அ அ- |

கடந்த இரு வருடங்களாக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார் அஸ்வின். அவர் கேப்டனாக இருந்த 28 ஆட்டங்களில் பஞ்சாப் அணி 12-ல் வெற்றியும் 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. கடந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடமும் இந்த வருடம் 6-ம் இடமும் பிடித்தது. இரண்டு வருடங்களிலும் கடைசிக்கட்டத்தில் மோசமாக விளையாடியதால் பிளேஆஃப்-புக்கு அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போனது. இந்நிலையில் பஞ்சாப் அணியிலிருந்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார் அஸ்வின். 2018 ஐபிஎல் ஏலத்தில் அஸ்வினை ரூ. 7.60 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. தற்போது, அதே தொகைக்கு அஸ்வின், தில்லி அணிக்குத் தேர்வாகியுள்ளார். 139 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின், 125 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எகானமி - 6.79.
இந்நிலையில் ஒரு பேட்டியில் அஸ்வின் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பை எல்லோருக்குமான லட்சியம். அதற்கான இந்திய அணியில் இடம்பெற யார் தான் விரும்ப மாட்டார்கள்? 2014-ல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுவ்ராஜ் சிங் மீண்டும் இடம் பிடித்தார். பிறகு 2017 சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியிலும் இடம்பெற்றார். இப்போது எனக்கு வயது 33 தான்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான என்னுடைய அனுபவம் சிறப்பாக இருந்தது. அதில் கிடைத்த அனுபவங்கள் எனக்கு உதவியாக இருந்தன. கேப்டன் பதவி கிடைத்ததால் புதிய பாதையில் பயணித்தேன். ஓரளவு என் பணியை நன்குச் செய்தேன். ஆனால் அணி மாறுவது எதுவும் என் கையில் இல்லை.
நினைத்தபடி வெற்றிகளை அணிக்குத் தரவில்லை என அணி உரிமையாளர்கள் கருதினார்கள். அது உண்மைதான். இரண்டு வருடங்களிலும் என்னால் அணியை பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற வைக்க முடியவில்லை. அதற்கு நீங்கள் காரணங்கள் சொல்லலாம். ஆனால், ஆமாம்... என்னால் அதைச் செய்ய முடியவில்லை என்று துணிச்சலுடன் நான் சொல்வேன்.
ஐபிஎல் போட்டியை இளைஞர்களுக்கானது என்று சொன்னாலும் அனுபவ வீரர்களைக் கொண்ட அணிகள் ஐபிஎல்-லில் சாதித்துள்ளன. டி20 உலகக் கோப்பையிலும் அப்படித்தான். அனுபவ வீரர்களைக் கொண்ட அணிகள் கோப்பையை வென்றுள்ளன. கிறிஸ் கெயில், டேரன் சாமி, பொலார்ட் என அனுபவ வீரர்களைக் கொண்டிருந்த மே.இ. தீவுகள் டி20 உலகக் கோப்பையை வென்றது என்று கூறியுள்ளார்.